ஊடகவியலாளரும் சமூக செயல்பாட்டாளருமான பாரதி தம்பி தனது முகநூல் பதிவில் கூறியிருப்பது:
மாமன்னன், தியேட்டரில் வெளிவந்த அடுத்த நாள் இதை எழுதலாம் என நினைத்தேன். அப்புறம், அப்போது இருந்த நிலைமைக்கு, இது ஸ்பாயிலர் ஆக இருக்க வேண்டாம் என எண்ணி பாதியில் விட்டுவிட்டேன்.
இப்போது, ஃபகத் ஃபாஸிலின் கதாபாத்திரத்துக்கு, அனேகமாக அனைத்து ஆதிக்க சாதிகளும் தத்தமது புகழ்பாடும் பாடல் வரிகளை மிக்ஸ் செய்து, பலவித எடிட்களை உலவ விட்டுள்ளனர். அதை நீர்த்துப் போக செய்ய காமெடி எடிட்களும், ஃபகத் போலவே, அதிவீரன் பாத்திரத்துக்கான ஒருசில எடிட்களுமாக… இது ஒரு சமூக ஊடக ‘நீயா, நானா’வாக போகிறது.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு மாரி செல்வராஜ் உருவாக்கும் கதாநாயகர்களின் உடல்மொழி, மனமொழி இரண்டும் ஏற்புடையதாக இல்லை. பரியேறும் பெருமாள், மாமன்னன் இரண்டிலும் இதே கருத்துதான். பரியேறும் பெருமாள் வெளிவந்த போது இந்த விமர்சனத்தை தாண்டி, அப்படி ஒரு வாழ்நிலையில், முற்று முழுதாக சாதி ஒடுக்குமுறையை கதைக்களமாக கொண்டு ஒரு திரைப்படம் என்பதால் அது ஆச்சர்யமாகவும், புதியதாகவும் இருந்தது. அந்த அம்சத்தில் அது மௌனம் உடைத்த; பேசாப்பொருளை பேசிய திரைப்படம்தான். என்னுடைய விமர்சனம் என்பது…
இந்த நாயகர்களின் உடல்மொழி மிகவும் பலவீனமாக இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளில் தோள்கள் ஒடுங்கி, பார்வை தாழ்ந்து, கரங்கள் உடலோடு ஒட்டி… நியாயம் கேட்டு இறைஞ்சும் ஓர் அபலையின் விண்ணப்பமாக இருக்கிறது. ‘ஓரிழை யாழாக மீட்டி இசைத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற கவிதையாகினும், ‘அத்தனையும் சொல்லிப்புட்டா தீர்ந்திடுமா ராசா, தீர்ந்திடுமா ராசா’ என்ற முறையீட்டிலும், ‘பத்து பேரை அடிச்சா அது 1000 பேரோட மானமா எப்படி மாறும். இது எனக்குப் புரியலை’ என்ற விரக்தியிலும், ‘நான் ஊருக்குள்ள வந்தா கொன்னுருவீங்களா?’ என்ற ஆற்றாமையிலும்… எல்லாவற்றிலும் ஒலிப்பது ஒரு அபலையின் குரல். அது ஒரு கதியற்றவனின் முறையீடாக… இறைஞ்சுகிறது. கிட்டத்தட்ட பரிதாபத்தை கோரும் பாவப்பட்ட மனிதனின் முனகல்.
நேரடியாக பொட்டில் அடித்தாற்போல் பேச வேண்டிய தருணங்களில் அவரது கதாநாயகர்கள், காடு, மலை, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி என்று ஏதோ ஓர் உருவகத்தின் பின்னால் போய் நின்றுகொள்கிறார்கள். ஆனால், ஒரு குறியீட்டில் சொல்ல வேண்டியதை சில நிமிடங்கள் நீட்டிக்கிறார். ஒரு நாயை போட்டு ரத்தச் சகதியில் அடித்துக் கொள்வதையும், இன்னொரு இளைஞனை ஃபகத் பாத்திரம் அடித்து நொறுக்குவதையும் மேலும் பல வதைகளையும் நெடுநேரம் நீட்டித்து சொல்கிறார். நமக்கு அய்யோவென இருக்கிறது. இதைப்பார்த்து ஒரு கவுண்டர் இளைஞன் பெருமிதம் கொள்வானா, குற்றவுணர்ச்சி கொள்வானா? இதைப் பார்க்கும் ஒரு தலித் இளைஞன் பதறிப் போவானா? எழுச்சி கொள்வானா?
மாரி செல்வராஜின் protagonist, தருணங்களை உருவாக்குவதில்லை… antagonist உருவாக்கும் தருணங்களுக்கு வினைபுரிகிறார்கள். இது போராளியின் குணம் அல்ல. இது பிழைத்திருக்க போராடுபவனின் குரல். இவரது கதாநாயகன் விடுதலையை விரும்புகிறான். அந்த ஏக்கத்தில் முன்னோக்கிச் செல்கிறான். ஆனால் ஏதோ ஒரு தைரியமின்மை, ஏதோ ஒரு Truama அவனை பின்னுக்கு இழுக்கிறது. அது ‘ஏதோ ஒன்று’ இல்லை… அப்பட்டமானதுதான். திரையில் அது என்னவாக உருமாறுகிறது என்றால்… விடுதலையின் கீதமாக ஒலிக்க வேண்டிய பாடல், ‘வுட்றாதீங்க யப்போ, வுட்றாதீங்க யம்மோ’ என அந்தரத்தில் முறையீட்டு மடல் வாசிக்கிறது.
சமூகத்தில் தலித்களின் வாழ்நிலை டிஃபென்ஸிவ்-ஆகவே இருக்கிறது என்பது ஒரு யதார்த்தம். திரையில் அது ஒரு கதை வடிவத்தோடு காட்டப்படும்போது, மாரிசெல்வராஜ் நமக்கு கடத்த விரும்பும் உணர்ச்சி என்ன? பார்வையாளன் இவரது படங்களில் என்ன take away எடுத்துச் செல்கிறான்? குறிப்பாக ஓர் ஒடுக்கப்பட்டவன், இந்த படங்களை பார்க்கும்போது, உத்வேகத்துக்கு பதிலாக, ‘இவனுங்க கிட்ட வெச்சுக்க கூடாது’ என்ற அச்சமே மேலோங்கும். அவமானங்களை டீட்டெய்லிங் செய்யும் அளவுக்கு அதை எதிர்த்து நின்று வென்று காட்டும் உத்வேகத்தை ட்டெய்லிங் செய்வதில்லை.
மாமன்னன் படத்தில் பல முக்கியமான தருணங்கள் உருவாகி வருகின்றன. அவற்றை போதுமான அளவுக்கு அல்லது பொருத்தமான அளவுக்கு காட்சிப்படுத்தாமல், கடந்து செல்கிறார். குறிப்பாக ஒரு காட்சி… ஒரு நெடுஞ்சாலையில், வடிவேலுவும், உதயநிதியும் காரில் ஊர் திரும்புவார்கள். அப்போது, ஃபகத் பாத்திரம் நடுரோட்டில் சாலையில் மடக்கி, காரில் ஏறி பேசும். அப்போது திடீரென வடிவேலு துப்பாக்கியை எடுத்து ஃபகத்-ஐ நோக்கி நீட்டுவார். அது ஒரு ஹீரோயிக்கான தருணம். ஒரு ஆண்டையின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மண்ணு, மாமன்னனாக நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம். முதலில் அதை எதற்கு காருக்குள் உட்கார வைத்து எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இரண்டாவது, துப்பாக்கியை நீட்டி, அத்தனை உணர்ச்சியோடு பேச வேண்டிய அந்த காட்சியில், ‘நீ எட்டு வயசுல எட்டணாவை முழுங்கிணப்போ, நான்தான் உன்னை காப்பாத்தினேன் தெரியுமா?’ என்பது போல ஒரு கழிவிரக்க வசனத்தை பேசுகிறார் மாமன்னன். எனக்கு அவ்வளவு ஏமாற்றமாக இருந்தது.
மாமன்னனை சபாநாயகர் நாற்காலியில் அமர வைப்பது கூட அதிவீரன் என்ற புரோட்டோகானிஸ்ட்டின் லட்சியம் அல்ல. அவரது ஆசைக்கூட இல்லை. திடீரென உருவாகும் ஒரு சண்டையில், அந்த தருணத்தின் உணர்ச்சியாக நாற்காலியின் அமரச் சொல்கிறார். அப்போது கூட, தன் அப்பாவை எல்லோரும் எழுந்து நிற்கும் ஒரு நாற்காலியில் அமர வைப்பேன் என்ற லட்சியத்தை அந்த பாத்திரம் வரித்துக்கொள்ளவில்லை. ரகசியமாக கூட அப்படி ஒரு ஆசையோ, வேட்கையோ இல்லை… அந்த முடிவை எடுப்பது கட்சித் தலைவராகிய லால். அப்புறம் அந்த அதிவீரன் பன்றி வளர்ப்பதை தவிர வேறு என்னதான் செய்கிறார்?
பத்தாண்டுகள் எம்.எல்.ஏ.வாக அதுவும், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒருவர், இத்தனை பலவீனமாக சித்தரிக்கப்படுவது நம்பகத்தன்மையற்றது மற்றும் போலியானது. அவர் பள்ளர், பறையர், அருந்ததியர் என எந்த பட்டியல் சாதியாக இருந்தாலும், எம்.எல்.ஏ., என்ற அதிகாரத்துக்கு வரும்போது, அந்த அதிகாரம் அவருக்கு ஓர் ஆளுமையை வழங்கும்; வழங்க வேண்டும். சொல்லப்போனால், அப்படி ஓர் ஆளுமை இருப்போர்தான், அந்த பதவியை நோக்கி நகர்வார்கள். பட்டியல் சாதியில், இத்தகைய ஆளுமை கொண்ட நபர்களின் வேட்கை மிக்க போராட்டத்தின் வழியேதான், தலைவர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையில் மாமன்னன் பாத்திரத்துக்கு எந்த ஒரு ஆளுமையும் உருவாக்கப்படவில்லை. மிகவும் பலவீனமான, தேர்தல் அரசியலுக்குத் தேவையான எந்த சாமர்த்தியமும் இல்லாத தத்தியாக சித்தரிக்கப்படுகிறார். இப்படி இருந்தால் ஒரு கிளைக்கழக செயலாளராக கூட நீடிக்க முடியாது.
மேலும், பத்தாண்டுகள் பதவியில் இருக்கும் அவருக்கு எந்த ஒரு மக்கள் பின்புலமும் இல்லையா? அவரைத் தேடி யாரும் வர மாட்டார்களா? அவருக்கு ஆள்பலம் இருக்காதா? ஏன் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வாழ்கிறார்? எந்த சொத்துபத்தும் பூர்வீகமாக இல்லாத அவர் எப்படி அந்த பங்களாவுக்கு சென்றுசேர்ந்தார்? நமக்கு சொல்லப்படும் கதை வரையிலும் கீர்த்தி சுரேஷ் பாத்திரம், ஒரு கொங்கு வேளாள கவுண்டர் என கருதுகிறேன். அந்த சாதியை சேர்ந்த ஒரு பெண், இத்தனை வெளிப்படையாக ஓர் அருந்ததியர் இளைஞனுக்கு ஆதரவளித்து உடன் நிற்க முடியுமா?
‘என் ஊருக்குள் வராதே’ என எந்த ஊருக்குப் போனாலும் மாமன்னனை விரட்டி அடிக்கிறார்கள் என்றால், அப்போ அதுக்கு முன்பு அவருக்கு ஓட்டு போட்டதெல்லாம் யாரு? சாதிக்காரன் தான் என்றாலும், அவன் கட்சிக்காரன் இல்லையா? அவன்லாம் எங்கே போனான்? அவ்வளவு தூரம் வெறுப்புகொண்டவர்கள் திடீரென ஒரு வீடியோ பார்த்து மாறிவிடுகிறார்களா? சாதிவெறியை மனம் மாறச் செய்வது இவ்வளவு எளிதானதா?
ஆதிக்க சாதி தரப்பை பழிபாவத்துக்கு அஞ்சாத எதையும் செய்யக்கூடிய அதிசூரர்களாக சித்தரிப்பதும், இந்தப் பக்கம் பெயரில் மட்டும், ‘அதிவீரன்’, ‘மாமன்னன்’ என அடையாளத்துக்குள் தேங்கிக்கொள்வதும் என்ன மனநிலையை உருவாக்கும்?
எப்படி ஒடுக்குகிறார்கள் என்பதை விதம் விதமான மன உணர்வுகளில் இருந்து சொல்கிறார். ஒடுக்குபவனின் மன உணர்ச்சியை, ஓர் ஆதிக்கசாதி செயல்படும் உளவியலை பல வசனங்களில் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். ஆனால் அப்படி ஒடுக்கப்படும் ஒருவன் எவ்விதம் மீண்டு எழுவது என்ற இடம் வரும்போது, அது வீச்சுடன் வெளிப்படுவதில்லை. தடுமாறுகிறார். பலவீனப்படுகிறார். தன் முதுகில் இருக்கும் சுமையை உதறித் தள்ளிவிட்டு முன்னே செல்லத் துடித்தாலும் ஏதோ ஓர் அச்சம் அவரை அழுத்துகிறது.
நமக்குள் ஏற்கெனவே இருக்கும் அரசியல் உணர்ச்சியினால், மாமன்னனை பொருத்திக்கொள்கிறோமே அல்லாமல், இந்தப் படம் தன் திரைமொழியால், காட்சியால் நமக்குள் அப்படி ஓர் அரசியல் வேட்கையை உருவாக்கவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.