Big Boss 5 Tamil Abishek Niroop portray Transgenders Namitha story : எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் பிக் பாஸ் பல சர்ச்சைகளுடனே ஆரம்பமானது. வரலாற்றிலேயே முதல் முறையாகத் திருநங்கை இந்த ஷோவில் ஒரு போட்டியாளராகப் பங்குபெற்றார். மாடல் உலகில் தனக்கென தனி அடையாளம் பதித்திருந்த நமிதா, வந்த வேகத்திலேயே மாயமானார். என்ன காரணத்திற்க்காக பிக்பாஸ் சீசன் 5 -ல் இருந்து அவர் வெளியேறினார் என்பது இப்போது வரை தெரியவில்லை. இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் சில ஆண் போட்டியாளர்கள், பெண்கள் போல வேடமணிந்து உலா வந்ததை பலரும் எதிர்த்து வருகின்றனர்.
அக்டோபர் 18 அன்று ஒளிபரப்பப்பட்ட எபிசோட், போட்டியாளர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரையும் உலுக்கியது என்றே சொல்லலாம். ஆணாகப் பிறந்து பெண்ணாகத் தன்னை அடையாளப்படுத்துவதிலிருந்த வலிகளை மிகவும் உருக்கமாகப் பதிவு செய்திருந்தார் நமிதா. அவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு தனக்கென தனி அடையாளத்தைப் பதித்தவர், நிச்சயம் இந்த சீசன் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அவர்தான் என்றிருந்தனர்.
என்னதான் நமிதா அவ்வளவு கதறி இருந்தாலும், வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் திருந்தியதாகத் தெரியவில்லை என்று அபிஷேக் மற்றும் நிரூப் பற்றி நெட்டிசன்கள் திட்டித் தீர்க்கின்றனர். தன்னுடைய வாழ்க்கை பாதையைச் சொல்லி முடிக்கும் போது, "நீங்கா எல்லாரும் எங்களை ஒரு வேடிக்கை பொருளாதான் பார்க்குறீங்க. இது மாறனும்" என்று கூறியிருந்தார். நமிதாவின் கதைக்கு சக போட்டியாளர்கள் அனைவரும் 'ஹார்ட்ஸ்; எமோஜி கொடுத்து சந்தோஷப்பட்டனர். இருந்தும் என்ன பயன்? அவர் கூறியதெல்லாம் போட்டியாளர்கள் அனைவரும் வெறும் கதையாகவே கடந்து சென்றுவிட்டனர் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
ஆம், நமிதா வெளியேறிய பிறகு வீட்டில் பல்வேறு விதமான டாஸ்குகள் நடைபெற்றன. அப்போது கேப்டன்சி டாஸ்கின்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை மற்ற போட்டியாளர்கள் அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி போட்டியை விட்டு வெளியேற்றவேண்டும். அந்த நிலையில், பார்த்தாலே சிரிப்பு வரவைத்துவிட வேண்டும் என்று நினைத்து அபிஷேக் மற்றும் நிரூப் ஆகிய இருவரும், பெண்கள் போன்று வேடமணிந்து வந்தனர். அதுமட்டுமின்றி, இருவரும் சற்று நெருக்கமாக இருப்பதுபோன்றும், நடை மற்றும் பேச்சு அனைத்தும் சினிமாவில் திருநங்கைகளாகக் காட்ட நாம் கண்டு சலித்துப்போனவற்றை நடித்துக் காட்டினர். இது உள்ளே இருப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், பொதுமக்களுக்குக் கடுப்புதான் வந்தது.
தங்களை இழிவாகப் பேசாதீர்கள், மோசமாகப் பார்க்காதீர்கள் என்றும் தங்களின் உடல் மொழியிலிருந்து பேச்சு வரை எதையும் கிண்டல் செய்யாதீர்கள், சக மனிதர்களாகவே பாருங்கள் என்றும் நமிதா அவ்வளவு சொல்லியும், இதுபோன்று அதே வீட்டிற்குள் நடந்திருப்பது பலருக்கும் அதிருப்தியைக் கொடுத்திருக்கிறது. இதுவே, நமிதா உள்ளே இருந்திருந்தால் இப்படி அவர்கள் யோசித்திருக்க முடியுமா? என்பதுதான் பலரின் கேள்வி. எல்லாவற்றையும் மீறி, நமிதா உண்மையில் அந்த வீட்டிற்குள் பாதுகாப்பாகத்தான் இருந்திருப்பாரா என்கிற கேள்வியையும் முன்வைக்கின்றனர்.
ஓர் ஒட்டுமொத்த இனத்தையே நகைச்சுவைக்காகப் பயன்படுத்திய விதம் மிகவும் தவறான செயல். அதிலும் இதே வீட்டில், குறிப்பிட்ட அந்த சமூதாயம் படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் கேட்டறிந்துகொண்ட பிறகும் இதுபோன்று நடப்பது சரியே இல்லை. ஒட்டுமொத்த உலகம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அவர்களே முன்னுதாரணமாக இல்லாத போது, பிறரைச் சொல்லி என்ன பயன். அவர்களின் வழிகளை என்று புரிந்துகொள்ளப்போகிறது இந்த சமூகம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.
இதுபோன்று விஷயத்தை வார இறுதியில் கமல்ஹாசன் கேட்பாரா? எவ்வளவுதான் திருநங்கைகளின் வலிகளை இப்படி நகைச்சுவையாகிக்கொண்டே போவது? இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil