தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ஊடகத்துறையில் அடியெடுத்து வைத்து தற்போது தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4-ன் மூலம் பிரபலமானவர் அனிதா சம்பத். 84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த இவர், கடந்த வாரம் ஆரி மற்றும் பாலாஜியுடன் கடுமையாக சண்டையிட்டதால் ரசிகர்களின் வாக்குகள் குறைந்தது. இதனால் கடந்த ஞாயிறு அன்று அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா வரும் புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடபோவதாக கூறி பெரும் மகிழ்ச்சியுடன் வெளியில் வந்தார். ஆனால் அவர் வெளியில் வந்து 2 நாட்களில் அவரது தந்தையும், பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளரான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாமி தரிசனத்திற்காக சீரடி சென்றிருந்த அவர் மீண்டும் சென்னை திரும்பும் போது பெங்களூர் ரயில் நிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா இதுவரை தனது தந்தையை பார்க்காத நிலையில், அவர் மரணமடைந்த சம்பவம் அவரது குடும்பததில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.