Bigg Boss 4 Tamil Suresh Chakravarthy Controversies: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளிலிருந்தே கன்டென்ட் கொடுக்கும் ஒரே டஃப் போட்டியாளர் சுரேஷ் மட்டும்தான். ‘கொளுத்திப்போடுவதில்’ மன்னன் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய வெடிகள் ஒவ்வொன்றும் ‘கில்லிங்’ வெடிகுண்டுகள். பல நேரங்களில் பிளான் போட்டு வேலைபார்ப்பவர், சில நேரங்களில் என்ன வெடி என்பதுகூட தெரியாமல் பற்றவைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்.
‘சில செய்தி வாசிப்பாளர்கள் ‘வணக்கம்’ சொல்லும்போது எச்சி தெறிக்கும்’ என்றுகூறி அனிதாவிடம் தொடங்கியது சுரேஷின் பற்றவைக்கும் பணி. மோகன் வைத்தியாவின் சாயல் இருக்கிறதே என்று முதல் வாரங்களில் தோன்றினாலும், ‘இல்லை இல்லை இவர் பயங்கரமான ஆளுப்பா’ என்று வீட்டையே மிரட்டி வருகிறார் சுரேஷ்.

அனிதாவைத் தொடர்ந்து சனம் ஷெட்டியிடம் வம்பிழுக்க ஆரம்பித்தார். ‘பொறுத்தது போதும் பொங்கி எழுடா’ என யாரோ சொல்லியிருப்பார்கள் போல (பிக் பாஸ் உங்களை சொல்லல), ரியோ சுரேஷுக்கு வில்லனாக மாறினார். அன்றிலிருந்து இன்று வரை இருவருக்கும் பனிப்போர் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் விளையாட்டின்போது, தனிப்பட்ட யுத்தியை உபயோகித்தது, கேப்டன்சி தேர்தலின்போது தனியாளாக நின்று கேபிக்கு சப்போர்ட் செய்தது என தன் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ இயல்பை ரசிக்கும்படியாக வெளிப்படுத்தியிருந்தார். பார்த்து கமல் சார்! உங்களுக்கே டஃப் கொடுப்பர் போலிருக்கே!
‘ஏண்டா எலியும் பூனையுமா சண்டைப் போட்டுக்கிட்டு இருக்கீங்க. ஒரு டூயட் போடுங்க’ என்று சொல்லாமல் சொல்லி அனிதா மற்றும் சுரேஷை ‘சின்ன மச்சான்..’ பாடலுக்கு ஆடவைத்தார் பிக் பாஸ். சும்மா சொல்லக்கூடாது என்ன ஒரு கெமிஸ்ட்ரி ரெண்டு பேருக்கும்! வார்த்தைகளில் நிதானமில்லாமல் இருப்பவர், தன்னை மாற்றிக்கொண்டே வருவதாகப் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் (சிறப்பு). ஆனால், சனம் மீதான கோபம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. சமீபத்தில், அரக்கர்கள் வேடமிட்டு அரசகுடும்பங்களை அசைத்துப் பதம் பார்க்கவேண்டும் என்கிற சவாலில், சுவாரசியத்தைச் சேர்த்தது சுரேஷ்தான். ஆனால், வேடத்தை உபயோகப்படுத்தி சனம் ஷெட்டியை நக்கலாகப் பேசியது, வேற லெவல்.

‘அடுத்தவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து மூக்கை வளர்த்தவளே’, ‘வேண்டாத விஷயங்களுக்கு வாயைத் திறப்பவளே இப்போது திற’ என சனம் ஷெட்டியைக் குறிப்பிட்டு வசனகர்த்தாவாகவே மாறிவிட்டார் சுரேஷ். எப்படியோ மனதிலிருந்த ஆதங்கத்தையெல்லாம் தீர்த்துவிட்டார். சனம் ஷெட்டியிடம் மட்டுமா.. சனம் ஷெட்டியோடு படுக்கையைப் பகிர்ந்திருக்கும் சம்யுக்தாவிடமும் ‘பாம்பை ஏன் பக்கத்தில் படுக்க வைத்திருக்கிறாய்!’ என்று மறைமுகமாக சனம் ஷெட்டியை வம்பிழுத்தார் சுரேஷ். (எங்க சார் இருந்தீங்க இவ்ளோ நாளா!)
முந்தைய சீசன்களில் இளசுகளின் ஆட்டம் என்றால், இந்த சீசனின் ‘ராக் ஸ்டார்’ சுரேஷ் சக்ரவர்த்திதான். இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் சுரேஷ் வீட்டைவிட்டு வெளியேறுவாரா என்பதுதான் தற்போது பலரின் கேள்வியாக உள்ளது. உங்கள் சாய்ஸ் எப்படி?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”