Bigg Boss 5 Tamil Thamarai Selvi Viral Video Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை பாதிப் பேர் புதிய முகங்கள். அதிலும், தாமரைச்செல்வி சாமானிய மக்களில் ஒருவர். நாட்டுப்புறக் கலைஞரான இவர், எப்படி இந்த பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்கிற சந்தேகம் இவர் என்ட்ரியின் போதே இருந்தது. ஆனால், பிக் பாஸ் வீட்டில் சகபோட்டியாளரான நமிதா வீட்டைவிட்டு பாதியிலேயே வெளியேறியதற்குத் தாமரைதான் காரணம் என்பது முதல் பல்வேறு விதமான சர்ச்சைகளில் ஒரே வாரத்தில் சிக்கினார். போகிற போக்கில் ஜூலி நிலைமைதான் இவருக்கும் வரும் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில், தாமரையின் கலக்கல் டான்ஸ் வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
‘அட! தாமரை செல்வியா இந்த ஆட்டம் ஆடுறது?’ என்று வியக்கவைக்கும் அளவிற்கு வேற லெவலில் ஆடியிருக்கிறார். மேடை நாடகக் கலைஞராகக் கலக்கிக்கொண்டிருந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராகக் களமிறங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தாமரை, தன் ஊரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே பரீட்சையமாக இருந்தார். இவரை உலகறிய செய்தது இந்த பிக் பாஸ் என்ட்ரி.
வறுமையின் காரணமாக சிறு வயதில் இருந்தே தெருக்கூத்து நாடகத்தைக் கற்றுக்கொண்டு தன் திறமையை வளர்த்துக்கொண்டார். மேடை நாடகத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, பல்வேறு கிராமங்களில் வள்ளி தெய்வானை நாடகத்தை நடத்தியும் வந்தார். இந்நிலையில், பிக் பாஸ் வாய்ப்பு இவரைத் தேடி வர, அதனை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது, ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்?’ எனும் டாஸ்க் செய்துகொண்டிருக்கின்றன. இதில், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கை பயணத்தைக் கூறி, அந்தக் கதைக்கு சகப் போட்டியாளர்களிடமிருந்து லைக்ஸ், டிஸ்லைக்ஸ் மற்றும் ஹார்ட்ஸ் ஆகியவற்றைப் பெறுவதே டாஸ்க். அந்த வரிசையில், இன்று காலை தாமரைச் செல்வி தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.
அதில், தன்னுடைய மகன் தன்னுடன் இல்லை. அவரிடம் காட்டாமல், தன் உறவினர் வீட்டில் இருப்பதாகவும், நேரிலும் சரி, தொலைபேசியிலும் சரி தன்னிடம் பேசுவதில்லை என்றும் கூறி அழுகிறார். மேலும், தன் மகனைப் பார்த்து 4 மாதங்கள் ஆகிறது என்று கூறி கலங்கியவர், தன்னைப்பற்றி தன் மகன் தெரிந்துகொள்ளவேண்டும், இல்லையென்றால் அம்மா படும் கஷ்டம் மகனுக்குத் தெரியாமலேயே போய்விடும் என்பதர்க்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனைக் கேட்ட மற்ற போட்டியாளர்களும் கண்ணீர் சிந்தினர்.
காலையிலேயே தாமரைச்செல்வியின் இந்த ப்ரோமோ வீடியோ பலரையும் பதைபதைக்க வைத்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில், முழு மேக்-அப்புடன் தாமரை மேடையில் ஆடும் காணொளி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. காலையில் அழுத தாமரைச்செல்வியா இது என்று பலரும் வாயடைத்துப் போகும் அளவிற்கு இருந்தது, பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவரான தாமரைச்செல்வியின் அந்த டான்ஸ் வீடியோ. ஏற்கெனவே அபிஷேக் ராஜாவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, தற்போது தாமரைச்செல்வியின் இந்த வீடியோவும் லிஸ்டில் இணைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil