மீடு விவகாரத்தில் பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர், இது ஒரு கேவலமான விஷயம் என்று நடிகர் தாடி பாலாஜி சாடியுள்ளார்.
சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை ஜனனி ஐயர் மற்றும் நடிகர் தாடி பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மி டூ குறித்து தாடி பாலாஜி மற்றும் ஜனனி மாறுபட்ட கருத்து
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு நடிகை ஜனனி ஐயர் பேட்டியளித்தார். பாலியல் தொந்தரவு குறித்து சமீப காலமாக நிறைய பெண்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இது போன்று பேசுவது ஆரோக்கியமான ஒன்றாகும்.
சினிமா துறையில் மட்டுமில்லாமல் ஐடி துறை உள்பட அனைத்து துறையிலும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் உள்ளது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் பாலாஜி பேசினார். அதில் மீடூ விவகாரத்தில் குற்றம் சாட்டும் பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்களா? அல்லது மற்றவர்களுக்கு விளம்பரம் தேடி கொடுக்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால், இது ஒரு கேவலமான விஷயம். இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே பாலாஜி பெண்களை இழிவாக நடத்துகிறார் என்று நித்யா தெரிவித்து வந்த தகவல்கள் சர்ச்சையை அதிகரித்தது. தற்போது இவர் இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருப்பது பல பெண்களுக்கு மத்தியில் கசப்பான உணர்வையே அளித்துள்ளது.