விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல்வேறு திருப்பங்களுடன் இறுதிச் சுற்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இரண்டாவது வைல்ட் கார்ட் போட்டியாளராக நடன இயக்குனர் அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
வழக்கம்போலவே மற்ற போட்டியாளர்களை போல, இவருக்கும் மக்களிடம் பெரிய அறிமுகமில்லை. அவர் வீட்டுக்கு வந்த உடனே, யார் இந்த அமீர் என பலரும் இணையத்தில் தேடினர்.
அப்போது தான் அமீர் பிரபல நடன இயக்குநர் என்பது தெரிந்தது. அவரது ஏடிஎஸ் க்ரூ ஊட்டி என்ற நடனக் குழு, கிங்ஸ் ஆஃப் டான்ஸ், டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் மற்றும் இந்திய ஹிப்ஹாப் டான்ஸ் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு நடனப் போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றுள்ளது.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சியிலும், இவர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு சில திரைப்படங்களுக்கும் இவர் கோரியோ செய்திருக்கிறார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் அமீருக்கு மிகப்பெரிய அறிமுகம் கிடைத்தது. வீட்டுக்குள் நுழைந்த சில நாட்களிலே அமீர் காதல் புரோமோவிலும் இடம் பிடித்து விட்டார். இவர் பாவனியுடன் செய்யும் குரும்புகள் தான் இப்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும், சில தினங்களுக்கு முன், கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசினர். இதில் அமீர் இளவயதில் அனுபவித்த கொடுமைகளை கேட்டு பலரும் கலங்கிவிட்டனர்.
அமீர் தனது ஒரு வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். ஆனால் அமீருக்கு 16வது வயது இருக்கும்போது, அவரின் அம்மா யாரா ஒருவரால் கொலை செய்யப்பட்டார். அப்போது அம்மாவின் உடலை அடக்கம் செய்யக்கூட காசில்லாமல், அமீர் பட்ட வேதனைகளை கேட்டதும் அனைவரது நெஞ்சமும் உடைந்துவிட்டது.
அமீருக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது ஆசை. இதற்காக அவர் பாதுகாப்பு துறைக்கு படித்தார். நாட்டின் மீது கொண்ட பற்றால், தேசிய கொடியை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். ஆனால் அமீரின் அம்மாவுக்கு அவர் ஒரு நல்ல டான்சராக வரவேண்டும் என்பது ஆசை.
இறுதியில் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற, அமீர் நடன இயக்குனராகி விட்டார். சொந்தமாக ஏடிஎஸ் க்ரூ ஊட்டி என்ற நடனக் குழுவை ஆரம்பித்தார். அப்போது அமீரின் வாழ்க்கையில் வெளிச்சம் வர ஆரம்பித்தது.
அமீர் நடன இயக்குனராக ஆனதுமே, அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா. அந்த குட்டி பெண்கள் தான் அமீரின் வாழ்க்கையை மாற்றினர். அந்த குழந்தைகளின் பெற்றோரான அஷ்ரப் – ஷைஜி தான் அமீருக்கு அடைக்கலம் கொடுத்து, சாப்பாடு கொடுத்து வளர்த்துள்ளனர்.
இளவயதில் அமீர் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும், பிக்பாஸ் வீட்டில் அவரது சில செயல்கள் ரசிகர்களை எரிச்சலடைய செய்கின்றன. குறிப்பாக அவர் பாவனியிடம் பேசுவது, பாவனியின் அனுமதி இல்லாமலே அவருக்கு முத்தத்தை கொடுத்த சம்பவம் என அனைத்துமே சோஷியல் மீடியாவில் பேசும் பொருளானது.
இந்த சூழ்நிலையில், அமீரின் வளர்ப்பு தந்தையான அஷ்ரப் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்த வீடியோவில் பாவனியிடம் அமீர் நடந்து கொள்ளும் விஷயம் குறித்து அவர் பேசுகையில், அமீர் இதுவரை எந்த பெண்ணையும் விரும்பியது கிடையாது.
அவன் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறான். அதனால் அவன் எடுத்த பெயரை எல்லாம் ஒரே நாளில் அவன் அழித்துவிட மாட்டான்.
ஆனால் பிக்பாஸ் வீட்டில் பாவனி நோ சொல்லியும், தொடர்ந்து அமீர் பேசுவதாக சொல்கிறார்கள். அவன் ஒருநாள் செய்ததை பார்த்துவிட்டு பலரும் அசிங்கமாக திட்டுகிறார்கள். உண்மையில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்தது தவறு என்றால் அதே பிக்பாஸே சொல்லியிருப்பார்.
அதேபோல அமீர் பேசுவது பாவனிக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த இடத்தை விட்டு எழுந்து போயிருக்கலாம், இல்லை அவனை அடித்திருக்கலாம். ஆனால் பாவனி அப்படி எதுவுமே செய்யவில்லை.
ஆனால் பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் நுழையும்போது இருந்த அமீரை தான் எனக்கு தெரியும். இப்போது இருப்பது அந்த அமீர் அல்ல என்பது போல அஷ்ரப் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “