பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் நெருங்கி பழகியவர்களே தன்னை ஒதுக்கியதாக, அறந்தாங்கி நிஷா பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் அறந்தாங்கி நிஷா. பட்டிமன்ற பேச்சாளரான நிஷா கலக்கப்போவது யாரு சீசன் 5ல் கலந்துக் கொண்டு இரண்டாம் இடம் பிடித்தார். நிஷாவின் காமெடியான பேச்சும், அதிரடியான நடவடிக்கைகளும் ரசிகர்களை ஈர்த்தது. பின்னர் விஜய் டிவியில் கலக்கல் சாம்பியன்ஸ், ராமர் வீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நிஷா கலந்துக் கொண்டார்.
நிஷா, இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, மாரி -2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஆகிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் நிஷா இருந்து வருகிறார்.
நிஷா, கமலஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அவரது சில நடவடிக்கைகள் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களிலும் கலந்து கொண்டவர்களைக் கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ராஜமாதா ரம்யா கிருஷ்ணனும், நகுலும் உள்ளனர். நிஷா, தாடி பாலாஜியுடன் ஜோடியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் நிஷாவின் டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் அருமையாக இருந்து வருவதாக நடுவர்கள் பாராட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இந்த வார எபிஷோடில், பன்ச் கேம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஒவ்வொரு போட்டியாளரும், அவர்களைப் பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சொல்லி பன்ச் செய்ய வேண்டும்.
உமா ரியாஸ்கானின் மகன் ஷாரிக், இந்த நிகழ்ச்சிக்கு வர்றதுக்கு முன்னாடி சில பேர் நீ ஏன் போற, உனக்கு எல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தகுதியே இல்லை என்று கூறினார்கள் என்று வருத்தத்துடன் சொல்லி பன்ச் வைத்தார்.
அடுத்ததாக அனிதா சம்பத் கூறுகையில், உனக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சுல்ல, இன்னொரு பையன் உன்ன தூக்குறான், உங்க வீட்டுல எப்படி இதுக்கெல்லாம் ஒத்துக்கிறாங்கனு கேக்குறாங்க, ஷாரிக் என் தம்பி மாதிரி என்று சொல்கிறார்.
அறந்தாங்கி நிஷா பேசுகையில், என் கூட நெருக்கமா பழகுனவங்களே நான் பிக் பாஸ் முடிச்சிட்டு வெளியில் வந்தப்ப என்கிட்ட சரியா பேசலை, நான் லூசு மாதிரி பீல் பண்ணிக்கிட்டு இருந்தேன், நா இப்ப அந்த கேரக்டரை எல்லாம் தூக்கி எறியுறேன் என வருத்தத்துடன் பன்ச் விட்டார்.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் நிஷாவுக்கே இந்த நிலைமையா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ப்ரோமோ இப்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil