சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கில் பிக்பாஸ் போட்டியாளர் கவின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் தமயந்தி. இவருடைய மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இதில், ராஜலட்சுமி என்பவர் நடிகரும் பிக்பாஸ் சீசன் போட்டியாளருமான கவினின் தாயார் ஆவார். தமயந்தியின் கணவர் அருணகிரி மற்றும் மகன் சொர்ண ராஜன் ஆகியோரும் அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.
இவர்கள் யாருக்கும் கட்டிய பணத்தை திருப்பி தரவில்லை எனவும், தங்களுடைய பணம் 32,28,000 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்று தர வேண்டும் எனவும், கடந்த 2007 ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நடிகர் கவின், 'நட்புனா என்ன தெரியுமா?' என்கிற திரைப்படத்திலும், சரவணன் மீனாட்சி மற்றும் பிக்பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமாகி உள்ளார். மேற்படி வழக்கு விசாரணையில், கடந்த வாரம் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அதில் 31 பேர் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் சொன்னார்கள். இதுதொடர்பான குறுக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருபாகரன் மதுரம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 31 சாட்சிகள் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகள் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும், அந்தத் தொகையை வழக்கு தொடர்ந்த 2007ஆம் ஆண்டு முதல் 5 சதவிகித வட்டி விகிம் கணக்கிட்டு ரூ.55.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். கட்டத் தவறினால் குற்றவாளிகளின் சொத்தைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் சீசன் சர்ச்சைகளின் ஊற்றாக விளங்கி வருகிறது. போட்டியில் இருந்து சரவணனின் திடீர் நீக்கம், மதுமிதா தற்கொலை முயற்சி என்று வலம் வந்த பிக்பாஸில் இப்போது போட்டியாளர் கவின் குடும்பமே சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.