Bigg Boss Mugen Rao : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக் பாஸ் நிகழ்ச்சி பலரை மக்களிடம் நெருக்கமாக்கியிருக்கிறது. அந்த வகையில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். அதில் ஒருவர் தான் முகென் ராவ்.
மலேசியாவைச் சேர்ந்த பாடகரான இவர், பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி, ரசிகர்களின் ஃபேவரிட் போட்டியாளரானார். அனைவரிடமும் அன்பு செலுத்துதல், இரக்கம் ஆகிய குணங்களால் தனித்துத் தெரிந்த முகென், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆனார். ரொம்ப வருடங்களாக தனது தாயும் தந்தையும் பிரிந்து வாழ்வதாக, நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார் முகென். வீட்டிற்குள் இருக்கும் போது தனது தந்தையுடன் உணர்ச்சி ததும்ப வீடியோ காலில் முகென் பேசியது, அனைவரையும் கண் கலங்க வைத்தது.
விசிட்டிங் நாட்களில் முகெனின் தாயும், தங்கையும் வந்து போனார்கள். அப்போது தன் குடும்பத்தினரிடம் அவர் கொண்டுள்ள அன்பு அபரிமிதமாக வெளிப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முகெனின் தந்தை பிரகாஷ் ராவுக்கு தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆகையால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்திருக்கிறார். அவருக்கு வயது 52.
இந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் முகெனின் ரசிகர்கள். அதோடு திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். பிரகாஷ் ராவின் இறுதிச் சடங்குகள், மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.