பிக்பாஸ் 3வது சீசனில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டதில் இருந்து கடைசியாக ரேஷ்மா வரை நிறைய போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள். ஆனால், பிக்பாஸ் ரசிகர்களை அதிகம் வேதனையடைய வைத்திருக்கிறது சரவணனின் வெளியேற்றம்.
தன் சிறு வயது காலத்தில் பேருந்தில் பெண்களை உரசுவதற்கு என்றே சென்றிருக்கிறேன் என சரவணன் ஒப்புக் கொண்டதற்கு கிடைத்த பரிசு, தண்டனை இந்த வெளியேற்றம். சிறுவயதில் அவர் செய்த தவறுக்கு பிக்பாஸ் ஷோவில் அவர் மன்னிப்பு கேட்டும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
அதுகுறித்த புரமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிக்பாஸ், 'சில காரணங்களுக்காக சரவணன் வெளியேறுகிறார்' என்று அறிவித்தவுடன் சாண்டியும், கவினும் கண்ணீர் விட்டு அழுதனர். மற்ற போட்டியாளர்களும் அதிர்ச்சியில் உறைய, சேரன் அனைவருக்கும் ஆறுதல் சொல்வது போல புரமோ வெளியிடப்பட்டுள்ளது.
மனதில் பட்டதை பட்டென பேசும் சுபாவம் கொண்டவராக இந்த பிக்பாஸ் ஷோவில் அறியப்பட்ட சரவணனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அவரது 'உரசல்' வாக்குமூலத்துக்கு ரசிகர்களிடம் இருந்து விமர்சனம் வந்தாலும், அதே ரசிகர்கள், அவரது நேர்மையாக ஒப்புக்கொண்ட குணத்தை எண்ணி அதை பெரிதுப்படுத்தவில்லை. அவரும் மன்னிப்பு கேட்க, உரசல் இன்றி அந்த உரசல் சம்பவம் மக்கள் மனதில் இருந்து அகன்றது. ஆனாலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது, பிக்பாஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி தரும் என்பதை மறுக்க முடியாது.