பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக டிவி சீரியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ் டைட்டிலை வென்றார். பிக் பாஸ் 2வது சீசனில் ரித்திகா டைட்டிலை வென்றார். 3வது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றார். இதனைத் தொடர்ந்து, கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகரும் பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் ஆரி டைட்டிலை வென்றார். அவருடன், போட்டியாளர்களாக, ரியோ, நிஷா, கேபி, சோம், ஆஜித், ஷிவானி, ரம்யா பாண்டியன், ரேகா என பெரும்பாலான விஜய் டிவி பிரபலங்கள் இடம்பெற்றிருந்தனர்.
இது வரை நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் 4வது சீசன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, நடிகர் சிம்புவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாக பேசப்பட்டது. ஆனால், 4வது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில், விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி புராஜக்ட்க்கான பேச்சுவார்த்தையை இப்போதே தொடங்கியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பதற்காக டிவி சீரியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் சிலரிடம் பிக் பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பதற்காக குக் வித் கோமாளி கனி, நடிகர் நகுல், சீரியல் நடிகர் அசீம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. அதோடு, 5வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிக சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் மாதமே பிக் பாஸ் சீசன் 5 புராஜக்ட்க்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதால், விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை ஜூன் மாதம் 3வது வாரத்தில் இருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களிடையே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பால், பிரபலங்கள் பலருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் காணப்படுகிறது. கடந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பெரும்பாலும் விஜய் டிவி பிரபலங்களே போட்டியாளர்களாக பங்கேற்றனர். அதனால், இந்த முறை போட்டியாளர்களில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.