பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தினமும் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஃபினிஷிங் லைனை நோக்கி நிகழ்ச்சி செல்லும் போது முழு வீச்சில் வெளியேற்றம் நடக்கிறது. இதற்கிடையில், எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் தங்களின் பிக் பாஸ் அனுபவம் குறித்து பேட்டி அளித்து வருகின்றனர்.
அப்படி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இசைவாணி, சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசினார் இசைவாணி பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது தனது கடந்தகால திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்துக்கான காரணம் பற்றி எதுவும் பேசவில்லை. இது, நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக மாறியது.
இசைவாணிக்கு 2019 ஆம் ஆண்டு டிரம்மர் சதீஷ் என்பவருடன் திருமணம் ஆனது. பிக்பாஸ் வீட்டில் இசை இருந்தபோது இசைவாணியின் நண்பர்கள் அவரது திருமண வாழ்க்கையைப் பற்றி பேசினர். திருமண வாழ்க்கை சரியாக நடக்காது என்று தெரிந்திருந்தும் இசை அதை பிடித்து வைக்க முயன்றார். ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர் என்று கூறினர்.
இதுகுறித்து இசைவாணி கூறுகையில், "நாங்கள் பிரிந்தபோது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். எனது திருமணத்தை மறைத்துவிட்டதாக பலர் கூறினர். ஆனால் அதை நான் மறைக்கவில்லை, அதை தனிப்பட்ட பிரச்சனையாக கொண்டு வரவில்லை. இன்னும் நிறைய மக்கள் கிண்டல் செய்தார்கள். இதற்குப் பிறகும் நான் மறைக்க வேண்டியதில்லை. இனிமேல் இது என் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கக்கூடாது என்பதற்காக நான் அதைப் பற்றி பேசவில்லை. விவாகரத்துக்குப் பிறகு என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று சிலர் சொன்னார்கள். நான் இப்போது வெற்றிகரமான கானா பாடகராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இசைவாணியும், ஐக்கிபெரியும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். இருவரும் சுயாதீன இசைக்கலைஞர்கள் என்பதால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து இசைவாணியும், ஐக்கி பெரியும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்நிலையில், ஐக்கி பெர்ரி இசைவாணியின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அங்கிருந்து இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் ஐக்கி கலந்துரையாடினார். அப்போது தாங்கள் இருவரும் சேர்ந்து வருங்காலத்தில் இசை ஆல்பம் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும், இதுதொடர்பாக பிக்பாஸ் வீட்டிலேயே இருவரும் ஆலோசித்ததாகவும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும், தங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு இருவரும் கூறினர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “