விஜய் டிவியில் 2017ம் ஆண்டு முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஒரு சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் 100 நாட்கள் எப்படி நடந்துகொள்கிறாகள். அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள பார்வையாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கடந்த பிக் பாஸ் சீசன் 4 தாமதமாக தொடங்கப்பட்டது. அதனால், பிக் பாஸ் சீசன் 5 முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக, தாமதமாக அக்டோபர் மாதத்தி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக குழுவினர் பிரபலங்களை தேர்வு செய்து வருவதாகவும் இந்த சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க அட்வான்ஸ் எல்லாம் வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது. இப்படி, இந்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசனைப் பற்றி தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இந்த சூழலில்தான், தற்போது பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்க உள்ள பிரபலங்களுக்கு பல்வேறு புதிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசனைப் போலவே போட்டியாளர்கள் அனைவரும் இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 வீட்டுக்குள் செல்லும் முன்பு குவாரண்டைனில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடரும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை கடுமையாக இருந்தது. தற்போதுதான் மாநில படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனிடையே, நாட்டில் 3வது அலைக்கு வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலிதான், பிக் பாஸ் சீசன் 5 நடத்த உள்ளதால் போட்டியாளர்களுக்கு தயாரிப்புக் குழுவினர் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"