ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவி-யின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனில் முதல் நாளிலேயே ‘இங்கு பிறந்தாலும் அயலான் அயலானே’ என்று பிக் பாஸ் போட்டியாளர் அசீம் முகமது காட்டமான அரசியல் பேச அதை கமல்ஹாசன் திருத்திக் கூறியது கவனத்தைப் பெற்றுள்ளது.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த சீசனையும் உலக நாயகன் நடிகர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து, பாப் இன்டிபென்டன்ட் பாடகரான அசல் கோலார், மாடலிங் திருநங்கை ஷிவின் கணேசன், சின்னத்திரை நடிகர் முகமது அசீம், நடன இயக்குநர் ராபர்ட், சின்னத்திரை நடிகை ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்சிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ், கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா, தனலட்சுமி என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தொகுப்பாளர் கமல்ஹாசன் உடன் பேசிவிட்டு தங்களுடைய அறிமுகத்துடன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அந்த வரிசையில், சின்னத்திரை நடிகர் முகமது அசீம், தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு பேசினார்.
அப்போது, தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆளூரைச் சேர்ந்தவர் என்றும் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நடிக்க வந்ததாகவும் கூறினார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானதாகத் தெரிவித்தார். மேலும், தனது குடும்ப வாழ்க்கையில், மனம் ஒத்து தானும் தனது மனைவியும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதாகக் கூறினார். ஆனால், தனது மகனைப் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பார்த்து அன்பு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம், தனது மகனிடம் அன்பு செலுத்தும் நேரங்களை இழப்பதாக கூறினார். அதே நேரத்தில், இது தனக்கு தனது மகனுக்கும் இடையிலான பாசத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.
முகமது அசீம் தன்னைஅறிமுகப்படுத்திக் கொள்ளும்போது கமல்ஹாசனிடம் தன்னுடைய தமிழ்ப்பற்றைப் பற்றிக் கூறினார். அப்போது அவர், “எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே… இங்குப் பிறந்தாலும் அயலான் அயலானே” என்ற புரட்சி கவிஞர் பாரதிதாசனின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.
கவிஞர் பாரதிதாசன் திராவிட இயக்க கவிஞராகப் போற்றப்பட்டாலும், அவருடைய, “எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே… இங்குப் பிறந்தாலும் அயலான் அயலானே” இந்த வரிகள் தீவிர தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளால் அரசியல் களத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முகமது அசீம் கூறிய வரிகளின் தீவிரத்தை உணர்ந்த கமல்ஹாசன், அவர் பேசி முடித்த பிறகு, நிதானமாக அதை திருத்தம் செய்து கூறினார். “நீங்கள் எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே… இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே என்று கூறினீர்கள். அதில் ஒரு திருத்தம், ‘தமிழ் உணர்வு இருந்தால் எங்குப் பிறப்பினும் அவர்கள் தமிழர்களே” என்று கமல்ஹாசன் திருத்தம் செய்து கூறினார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகர் முகமது அசீம் தெரிந்தோ தெரியாமலோ, காட்டமான வரிகளைக் கூறி அரசியல் விவாதத்தைப் பற்ற வைக்க, கமல் ஹாசன் அதை திருத்தம் செய்து சமன் செய்தது கவனத்தைப் பெற்றுள்ளது.
நடிகர் முகமது அசீம் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் தனக்கு தமிழ் பற்று அதிகம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”