பிக் பாஸ் வீட்டில் வாக்குவாதத்தின்போது ஜோவிகா ஒருமையில் பேசியதால், விசித்ரா கண்ணீர் விட்டு அழுதார்.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் 7வது சீசனில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தை நெருங்கி வரும் நிலையில், போட்டி இப்போது விறுவிறுப்பை அடைந்துள்ளது. போட்டியாளர்களிடம் கருத்து மோதல்களும் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் நேற்றைய எபிசோடில், நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா படிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன. அதில், ஜோவிகாவிடம் நடிகை விசித்ரா தமிழில் எழுதிக் காட்டச் சொல்கிறார். அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வரலை, அதனால நான் எழுதமாட்டேன். வராத ஒன்றை எதற்கு பண்ணனும்? என்று கேட்கிறார்.
மேலும், ஒன்பதாம் வகுப்போடு எனக்கு படிப்பு வரவில்லை என்று படிப்பை நிறுத்திவிட்டேன். படிப்பு மட்டும் தான் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை. அதை தாண்டி நிறைய திறமைகள் உள்ளன. அந்த திறமையின் படி நம் வாழ்க்கையை கொண்டு போக வேண்டும். எனக்காக எவ்வளவோ முயற்சிகளை எங்க அம்மா எடுத்தாங்க, ஆனால் என்னால் முடியவில்லை இப்பொழுது அவங்க விட்டுட்டாங்க. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றும் ஜோவிகா கூறினார்.
இதற்கு விசித்ரா யாராகயிருந்தாலும் அவர்களுக்கு அடிப்படை கல்வி அவசியம் என்று கூறினார். டாக்டர் ஆகு, என்ஜினியர் ஆகு என நான் சொல்லவில்லை. அடிப்படைக் கல்வி இருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்ய, பேங்க் போனால் என பல விஷயங்களுக்கு அது அவசியம் என விசித்ரா கூறுகிறார்.
அதற்கு, 'டிக்கெட் புக் பண்ண ஏஜென்சி இருக்கு, பேங்க்ல தெரியலைனா போய் கேஷியர் கிட்ட கேளுங்க, அதுக்கு தான காசு குடுக்குறீங்க' என ஜோவிகா பதில் கொடுத்தார்.
வாக்குவாதம் நடைபெறும் போது ஜோவிகா விசித்ராவை ஒருமையில் பேசினார். இதனால் வயதுக்கு கூட மரியாதை இல்லையா என விசித்ரா கண்ணீர் விட்டார். இதனையடுத்து சக போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“