சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஃபிலிம் சிட்டியில் உள்ள செட்டில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஒரு வீட்டுக்குள் 100 நாட்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் டாஸ்க்குகள் அளிக்கப்படும். ஒவ்வொரு வாரமும் தொகுப்பாளர் நடந்த நிகழ்வுகளை அலசுவார். இதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. வெளிநாடுகளில் பிரபலமாக இருந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய தொலைக்காட்சிகளிலும் தொடங்கப்பட்டது.
தமிழில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை இதுவரை 4 சீசன்களை நடத்தியுள்ளது. இந்த 4 சீசன்களையும் சென்னைக்கு அருகே உள்ள தனியார் ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் செட் அமைத்து நடத்தப்பட்டது. பிக் பாஸ் சீசன் 5க்கான ஏற்பாடுகளும் செட் அமைக்கும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது.
அதே போல, மற்ற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்த வகையில், மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சென்னை பூந்தமல்லி அருகே செட் அமைக்கப்பட்டு நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்க கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், அங்கே சில சீரியல்கள் படப்பிடிப்புகளும் நடத்தப்படு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடுமையாக உள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. செட்டில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி அருகே தனியார் ஃபிலிம் சிட்டியில் உள்ள செட்டில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், தனியார் ஃபிலிம் சிட்டி செட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சிக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தனியார் ஃபிலிம் சிட்டியில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது மலையாளம் பிக் பாஸ் செட்டிலா அல்லது அங்கே டிவி சீரியல் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் செட்டிலா அல்லது தமிழ் பிக் பாஸ் செட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இருப்பினும், சென்னை தனியார் ஃபிலிம் சிட்டி செட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைளின்படி, தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"