Bigg Boss Tamil 3: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, பல சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. சமீபத்தில் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டவருமான மதுமிதா கையை அறுத்து தனக்குத்தானே தீங்கு விளைவித்துக் கொண்டதால், அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதற்கு முன்பு, இயக்குனர் சேரன் தன்னை ’மேன்ஹேண்ட்லிங்’ செய்து விட்டதாக மீரா மிதுன் குற்றம் சாட்டினார். நடிகர் சரவணன், சேரனைப் பற்றி அவதூறு பேசினார், இறுதியில் தனது தகாத வார்த்தைகளுக்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
சேரனுடன் அமீர்
இந்நிலையில், ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் கலந்துக் கொண்டார். அதில் பேசிய அவர், ”ஒரு சிறந்த இயக்குனராக சேரனை நான் மதிக்கிறேன். திரைத்துரையில் நுழைந்தபோது சேரனின் ஆட்டோகிராஃப் படத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது சேரன் எனது குடும்ப நண்பர்” என்றார்.
தொடந்து பேசிய அமீர், “பிக் பாஸ் வீட்டிற்குச் செல்வதாக முன்பே சேரன் கூறியிருந்தார், நான் பிக் பாஸை பார்க்கவில்லை என்றாலும், சமீபத்தில் சேரன் கொடுமைகளுக்கு உள்ளாகி, மோசமாக நடத்தப்பட்ட சில காட்சிகளைப் பார்த்தேன். இவை என்னை ஆழமாகக் காயப்படுத்தியது, மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாக இருந்தாலும் கூட, நான் பிக் பாஸ் வீட்டை அழித்து, சேரனை வெளியே கூட்டி வர முடியும். ஆனால் நான் அமைதியாக இருக்கிறேன்” என்றார்.