பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி 2 வாரங்களுக்கு மேலாகி விட்டது. சண்டை, கோபம், உணர்ச்சி மிகுதல் என நாளுக்கு நாள் சுவாரஸ்யபடுத்தி வருகிறார்கள் போட்டியாளர்கள். ஜூன் 23-ம் தேதி துவங்கி இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். முதலில் 15 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் 2 நாட்கள் கழித்து மாடலும் நடிகையுமான மீரா மிதுன் 16-வது கலந்துக் கொண்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷனாக செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். அலப்பறைகளுக்குப் பெயர் போன அபிராமி இந்த வார தலைவராகியிருக்கிறார். இதன் பின்னர் வழக்கம் போல் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்தது. மதுமிதா, மீரா மிதுன், வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. அதன்படி, பிக்பாஸ் வீட்டில் கொடூர கொலையாளிகள் நுழைந்து ஒவ்வொரு ஹவுஸ்மேட்சையும் கொல்ல வேண்டும். இதில் கொலையாளிகளாக வனிதாவையும், முகின் ராவையும் தேர்வு செய்தார் பிக்பாஸ். பிக்பாஸ் தரும் கட்டளையின்படி ஹவுஸ்மேட்ஸை இவர்கள் கொல்ல வேண்டும். அதன்படி சாக்ஷி அகர்வால் போட்டிருந்த மேக்-அப்பை அழிக்கச் செய்து அவரை கொலை செய்தவர்கள், அடுத்ததாக மோகன் வைத்யாவை மைக்கேல் ஜாக்சன் போல ஆடவைத்து கொன்றனர்.
கொல்லப்பட்ட இருவருக்கும், ஆவி உடை அணிவித்து, பிக்பாஸ் வீட்டு முற்றத்தில் போடப்பட்ட மயான செட்டில் வைத்து புதைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் அங்கு ஆவியாக பொழுதை கழிக்க வேண்டும் என்பது பிக்பாஸின் கட்டளை. இதில் சுவாரஸ்யம் என்றால் இறந்த சாக்ஷி, மோகன் வைத்யாவுக்கு தங்களை கொன்றது யார் எனத் தெரியாது. இதர ஹவுஸ்மேட்ஸ்களுக்கும் தங்களை யார் என்ன திட்டத்தின் அடிப்படையில் கொல்லப் போகிறார்கள் என்பது தெரியாது. இந்த டாஸ்க் அடுத்த நாளும் தொடரும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
இத்தனை நாள் கண்ணீரும் கலகமுமாக இருந்து வந்த பிக்பாஸ் வீடு, இந்த டாஸ்கின் மூலம் கலகலப்பாக மாறியுள்ளது.