Bigg Boss Tamil 3 - Day 18: பிக்பாஸ் நிகழ்ச்சி 18-வது நாளை முடிவு செய்திருக்கிறது. வார இறுதியை நெருங்கும் நிலையில், இந்தவாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே நேற்றைய எபிசோடை கொஞ்சம் அசைப்போடுவோம். கடந்த சில தினங்களாக கலகலப்பூட்டிய ‘கொடூர கொலைகாரன்’ டாஸ்க் சச்சரவுடன் முடிவு பெற்றிருக்கிறது. காரணம், கொலையாளிகள் யார் என்பதை யார் என ஹவுஸ்மேட்ஸ் கண்டு பிடித்தது தான். ஆம்! வனிதாவும், முகின் ராவும் தான் இந்த கொலைகளை செய்ததா என அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
கலகலப்பாக பிக்பாஸ் வீட்டில் 18-ம் நாள் தொடங்கியது. பிக்பாஸின் ஆணைக்கு இணங்க, கவினை வேடிக்கையான முறையில் கொலை செய்வதற்கு ஆயத்தமானார் வனிதா. இதற்கிடையில், இனி வேறெந்த கொலையும் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ள, கவின் மற்றும் மீரா மிதூன் காவலர்களாக நியமிக்கப்பட்டனர். கொலைகளை அரங்கேற்றுபவர்களை கண்டறிவதற்காக சாண்டி பூசாரியாக நியமிக்கப்பட்டார்.
மறுபுறம், துப்பாக்கியை மறைத்து வைத்து கவினை வெற்றிக்கரமாக கொலை செய்தார் முகின் ராவ். பின்னர் கவினை மயானத்திற்கு அனுப்பி வைக்கும் சடங்கு நடந்தது. இத்துடன் ‘கொடூரக் கொலை’ டாஸ்க் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அனைவரையும் சோஃபாவில் அமர வைத்து, கொலையாளிகள் வனிதா மற்றும் முகின் ராவ் தான் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, பற்ற வைத்தார் பிக்பாஸ்.
இது போட்டியாளர்கள்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. சிறப்பாக டாஸ்க் செய்தவர்களாக வானிதா, மோகன் வைத்யா, மற்றும் சாக்ஷி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் இவர்கள் மூவரும் அடுத்தவார தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் என அறிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்க்கில் கலந்துக் கொள்ளாதவர்கள் குறித்த கேள்விக்கு, சேரன் மற்றும் சரவணனின் பெயரை சொன்னார் அபிராமி.
இதனால் டென்ஷனான சரவணன் தானும் விளையாடியதாக தெரிவித்து, சாண்டி, தர்ஷன், கவின் உள்ளிட்டவர்களிடம் தன்னை எப்படி அபிராமி அவ்வாறு சொல்லலாம் என சாடினார். சேரனும் தான் கலந்துக் கொண்டதாகக் கூறினார். இருப்பினும் வீட்டின் தலைவி சொல்லி விட்ட காரணத்தினால் கைதி உடையை அணிந்துக் கொண்டு சிறைக்கு செல்ல தயாரானார்.
அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், தன்னால் டாஸ்க்கில் சரிவர பங்கெடுக்க முடியவில்லை என லாஸ்லியா தன் தரப்பு நியாத்தை சொல்ல முற்பட, அதற்கு இடம் தராமல் வனிதா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமான லாஸ்லியா அந்த இடத்தை விட்டு வெளியேறினார், அவரை கவின் சமாதானம் செய்தார்.
பின்னர் சேரன், சரவணன் ஈடுபட்ட அளவு கூட கவின் இந்த டாஸ்க்கில் ஈடுபடவில்லை என்ற கருத்தை முன் வைத்தார் வனிதா. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இதனை ஆமோதிக்கவும் செய்தனர். இதனால் கவினும் கைதி உடையை அணிந்துக் கொண்டு சிறைக்கு செல்ல தயாரானார்.
ஆக, சரவணன், சேரன், கவின் ஆகிய 3 பேரில் முதலில் சிறைக்கு செல்வது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதற்கான விடை இன்று தெரியும்!