"நீங்க ஷட் அப் பண்ணுங்க" ஓவியா ஆக விரைவில் மாறுவார் லோஸ்லியா - பாத்திமா பாபு

Biggboss tamil 3 : 105 சேலைகள் அதற்கேற்றாற்போல உடைகள், நகைககள் உள்ளிட்டவைகளை கொண்டு சென்றேன். ஆனால், அதை அங்கே பயன்படுத்த தான் முடியவில்லை

S Subhakeerthana

பிக்பாஸ் சீசன் 3ல், லோஸ்லியா அடுத்த ஓவியா ஆக மாற வாய்ப்பு இருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியுள்ள பாத்திமா பாபு கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 இரண்டு வாரங்களை கடந்து உள்ளது. மக்களின் ஏகோபித்த ஆதரவை இன்னும் முழுமையாக பெறவில்லை என்றாலும், வரும்வாரங்களில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நிகழ்ச்சி கட்டமைக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பாத்திமா பாபு அளித்துள்ள பிரத்யேக பேட்டி …

ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதித்தீர்கள்?

என்னை நானே உணர்ந்துகொள்வதற்கான சரியான பிளாட்பார்ம் ஆக பிக்பாஸ் நிகழ்ச்சியை கருதியதால், அதில் பங்கேற்க முடிவு எடுத்தேன்.செய்தி வாசிப்பாளர், திரைப்பட நடிகை, நாடக நடிகை என பலதுறைகளில் பெற்ற புகழை விட, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியே, தனக்கு அதிகளவில் பேரும், புகழும் பெற்றுத்தந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபின், ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தே சோர்ந்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்த நிகழ்ச்சியில் தான் பெற்ற பலனை. ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் கேரக்டராக நான் மாறிவிட்டேன்.

பிக்பாஸ் வீட்டில் இருந்ததை எவ்வாறு உணர்ந்தீர்கள்?

எனக்கு நடிக்க தெரியாது. எனக்கு சண்டை போடவும் தெரியாது. சண்டை நடைபெறும் இடத்திலிருந்து எப்போதும் ஒதுங்கியே இருப்பேன். என்னிடம் ஆலோசனை கேட்டால் மட்டுமே சொல்லுவேன். பிக்பாஸ் வீடு சிறப்பாகவே இருந்தது.

மற்றவர்களிடமிருந்து எப்போதும் விலகியே இருந்தீர்களே?

உண்மையை சொல்லவேண்டுமென்றால், முதல்நாளில் அவர்களுடன் என்னால் ஒட்டமுடியவில்லை. இரண்டாவது வாக்குவாதம் செய்பவர்களையும், வாக்குவாதம் நடைபெறும் இடத்திலிருந்து எப்போதும் விலகியே இருக்க விரும்புபவள் நான். அவர்கள் என்னை மட்டும் விடுத்து கூட்டம் கூட்டமாக இருக்வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால், நானாகவே விலகிக்கொண்டேன். உதாரணமாக, மீரா மிதுன் இல்லாத நேரங்களில், மீராவை பற்றி வனிதா தொடர்ந்து பேசிவந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. அதனால், அந்த இடத்திலிருந்து விலகிச்சென்றேன். நான் மிகவும் பக்குவப்பட்டவள். கமல் சாரே, அதை பலமுறை சொல்லியிருக்கிறார். கமல் சார் என்னைப்பற்றிய நல்ல விசயங்களை சொல்லும்போதே, இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை போன்ற உணர்வை பெற்றுவிட்டேன்.

அடுத்ததாக, வனிதா வெளியேறுவாரா?

எனக்கு தெரியவில்லை. வனிதா கத்தி கத்தி பேசுகிறார். பார்வையாளர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை சரியாக செய்கிறார். ஆயிரக்கணக்கான மக்களை அவர் மகிழ்விக்கிறார். வனிதா மட்டும் இல்லையென்றால், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போரடித்து விடும்.

நீங்கள் முதலில் வெளியேறியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அப்போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?

உண்மையை சொல்லவேண்டுமென்றால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். முதல் வாரத்தில் சக பங்கேற்பாளர்களுக்கு சிரிப்பு தெரபி கொடுத்தேன். பின் செய்தி வாசிப்பது குறித்து சொல்லி கொடுத்தேன். நான் ஒரு சிறந்த கவுன்சிலராகவே அங்கு இருந்தேன். என்னுள் இருந்த திறமையை இந்நிகழ்ச்சி வெளியே கொண்டுவந்துள்ளது. மற்ற எந்த டிவி நிகழ்ச்சிக்கும் இந்தளவு டிஆர்பியோ, ரசிகர் வட்டமோ இல்லை. எல்லாரும் அங்கேயே இருந்துவிடப்போவதில்லை. ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டே தீருவர். அதில் முதல் ஆளாய் நான் வந்துள்ளேன். இதில் நான் எவ்வித கவலையும் கொள்ளவில்லை.

நீங்கள் அதிக நாட்கள் இருப்பீர்கள் என்று நாங்கள் நினைத்தோம்…

நானும் அப்படித்தான் நினைத்தேன். அதற்காக 105 சேலைகள் அதற்கேற்றாற்போல உடைகள், நகைககள் உள்ளிட்டவைகளை கொண்டு சென்றேன். ஆனால், அதை அங்கே பயன்படுத்த தான் முடியவில்லை, அதுதான் தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை மிஸ் பண்ணுகிறீர்கள். உண்மை தானே?

எனது கைப்பக்குவத்திலான சாப்பாடு அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. நான் செய்யும் சப்பாத்தி, வெண் பொங்கல் – சட்னி உள்ளிட்டவைகளை அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டனர். அவர்களுக்கு ஒரு தாயை போல பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தேன். அந்த நிகழ்வை நிச்சயம் மறக்க இயலாது.

பிக்பாஸ் வீட்டில், உங்களுக்கு நல்ல நட்பாக யாரை நினைக்கிறீர்கள்?

தர்ஷன். அவனுக்கும் எனக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. தர்ஷன். என்னை எப்போதும் அம்மா என்றே அழைப்பான். அவன் நன்றாக இருக்க வேண்டும். லோஸ்லியாவிடம் நல்ல நட்பு உண்டு.

யார் இதில் அதிகம் ஒட்டவில்லை என்று நினைக்கிறீர்கள்?

சரவணன். நானும் பலமுறை பார்த்துவிட்டேன். அவர் யாருடனும் சேரமாட்டார். தனித்தே இருப்பார். நிறையமுறை, அவரிடம் சொல்லிவிட்டேன். அவர் அதை கேட்பதாக இல்லை. சரி அது அவரது குணம் என்று நான் ஒதுங்கிவிட்டேன்.

வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பீர்களா?

நிச்சயமாக பார்ப்பேன். நீங்கள் எதிர்பார்க்காத பல்வேறு நிகழ்வுகள் வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்த்த உள்ளார். அது என்னெவன அறிய உங்களைப்போல நானும் ஆர்வமாக உள்ளேன்.

யார் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறிர்கள்?

தர்ஷன் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். ஆனால், லோஸ்லியா மற்றும் சாண்டி சமபலத்துடன் உள்ளனர். லோஸ்லியா, விரைவில் அடுத்த ஓவியா ஆக ஒரு ரவுண்டு வருவார். சாண்டிக்கு அபார நகைச்சுவை திறமை உள்ளது. என்று பாத்திமா பாபு கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close