Bigg Boss Tamil 3 - Day 25: பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23-ம் தொடங்கி, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இப்போட்டியில் 2 பேர் வெளியேற்றப்பட்டு, தற்போது 14 பேர் களத்தில் உள்ளனர்.
புதன் கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில், சாக்ஷியும் கவினும் நட்பை முறித்துக் கொண்டார்கள். கவினிடம் சாக்ஷி கோபம் காட்ட, அவரை சமாதானம் செய்ய மிகவும் முயன்றார் கவின். ஆனால் பெரிதாக சட்டை செய்யாமல் இருந்தார் சாக்ஷி. இதனால் ஏற்பட்ட வருத்தத்தை, லோஸ்லியாவிடம் பேசிக்கொண்டிருந்தார் கவின். இதை கவனித்துக் கொண்டிருந்த ரேஷ்மா, சாக்ஷிடம் கூறியதால், மேலும் கோபமானார் சாக்ஷி.
நேற்றைய நிகழ்ச்சியில் ’கரகாட்டக்காரன்’ படத்திலிருந்து ’ஊரு விட்டு ஊரு வந்து’ என்ற பாடல் ஒலிபரப்பானது. கவினை மனதில் வைத்து தான் பிக்பாஸ் இந்தப் பாடலை போட்டிருப்பதாக ஹவுஸ்மேட்ஸ் கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து ’ஹார்டின்’ வடிவில் தர்ஷனுக்கு சப்பாத்தி சுட்டார் ஷெரின். அதை லாஸ்லியா கத்தியால் குத்துவது போல் செய்தார். இதனால் ஷெரீன் செல்லமாக கோபித்துக் கொண்டார். இதுதொடர்பாக லாஸ்லியாவிடம் தர்ஷனும், சேரனும் விசாரித்தனர். ஷெரீனுடன் தனக்கு செல்ல கோபம் உள்ளதாகவும், அதனால் அப்படி தான் செய்வேன் எனவும் அதற்கு விளக்கமளித்தார் லாஸ்லியா. இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷெரின் சிரித்துக் கொண்டே வெளியேறினார்.
லக்ஸுரி டாஸ்கில் இந்த வாரம் சிறப்பாக விளையாடியவர்களை தேர்வு செய்யும் முறையில், சரவணன், ரேஷ்மா மற்றும் தர்ஷன் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பலனாக அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிட அவர்கள் தகுதி பெற்றனர். இதில் சரியாக விளையாடாத சாக்ஷி மற்றும் மீரா ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர்.
வீட்டுச் சிறைக்குள் இருந்த மீராவுக்கு, வெளியே ஹவுஸ்மேட்ஸ் பேசிக்கொண்டிருந்தது பிடிக்கவில்லை. இதனால் அங்கியிருந்து அவர் கழிவறைக்கு சென்றுவிட்டார். வெகு நேரம் ஆகியும் அவர் வராததால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. பிறகு, பிக்பாஸ் மீராவை வெளியே அழைத்தார். பின்னர் வெளியே வந்த மீரா, சாக்ஷி உள்ளிட்ட மற்றவர்கள் மீது புகார் கூறினார். இதனை மறுத்துப் பேசினார் சாக்ஷி.