/indian-express-tamil/media/media_files/2025/08/18/bigg-boss-tamil-season-9-important-announcement-krishnan-kutty-is-the-head-of-cluster-entertainment-south-jiostar-tamil-news-2025-08-18-17-37-48.jpg)
நெல்சன் பிரதீப் குமார், அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற பிரபல இயக்குநர்கள் நிகழ்ச்சியை இயக்கிய நிலையில், இந்த சீசனை பிரவீன் மற்றும் அர்ஜூன் இயக்க உள்ளனர்.
தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது ஒன்பதாவது சீசனுடன் விரைவில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. 2017ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. 100 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டில் சக போட்டியாளர்களுடன் தங்கி, கொடுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் வெல்லுவார்.
இதுவரை ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்–லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, சித்தப்பா சரவணனின் வெளியேற்றம், தாடி பாலாஜி சம்பவம் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றுள்ளன. முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 குறித்து ஜியோஸ்டார் கிளஸ்டர் தலைவர், பொழுதுபோக்கு (தெற்கு) கிருஷ்ணன் குட்டி தெரிவிக்கையில், “இந்த முறை சில சமூக ஊடக பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர். இதற்கு முன்னர் நெல்சன் பிரதீப் குமார், அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற பிரபல இயக்குநர்கள் நிகழ்ச்சியை இயக்கிய நிலையில், இந்த சீசனை பிரவீன் மற்றும் அர்ஜூன் இயக்க உள்ளனர். மேலும், ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்கள், நேரடியாக போட்டியாளர்கள் குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்; வரவிருக்கும் ஒன்பதாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு சீசனிலும் புதுமை கொண்டு வரும் பிக்பாஸ், இந்த முறை எந்த வகை மாற்றங்களை ரசிகர்களுக்கு பரிசளிக்கப் போகிறது என்ற ஆர்வம் அனைவரிடமும் நிலவுகிறது. நிகழ்ச்சியை விரைவில் மட்டும் ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.