Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை செய்தி வாசிப்பாளர்கள், மாடல்கள், நடிகர்கள், இயக்குநர், பாடகர்கள், நடன இயக்குநர் என பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இதில் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் தியாகராஜனும் ஒருவர். அவரின் காதலியாக கிசுகிசுக்கப்படும் நடிகை சனம் ஷெட்டி, தற்போது தர்ஷனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தர்ஷனால் தான் பெருமைப்படும் விஷயம், அவரது அணுகுமுறை மற்றும் டாஸ்க் ஈடுபாடு பற்றி, தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி.
”தர்ஷன் உன்னால் நான் பெருமைப்படுகிறேன். இந்த படம் எனது பெருமையையும், மகிழ்ச்சியையும் சரியாக வெளிப்படுத்துகிறது. உன்னை டாமினேட் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள், உன்னோடு போட்டியிட முடியாது என்பதை உணருவார்கள். 22 நாட்கள் கடந்து விட்டது. இன்னும் வலிமையாக இரு. எங்கள் அனைவரின் சார்பாக உனக்கு நிறைய அன்பும் வாழ்த்தும்” என்பதோடு #getoutmeera என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டிருந்தார். தர்ஷனை ஆதரிப்பதில் ரசிகர்களும் சனத்துடன் இணைந்துள்ளனர்.
முந்தைய வாரத்தில், மீரா மிதுன் தர்ஷனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறியிருந்தார். இது கூட ஒரு ஸ்டேடர்ஜியாக இருக்கும் என சேரன் அதற்கு கருத்து தெரிவித்திருந்தார்.
தனக்கு வெளியே ஒரு க்ரஷ் இருப்பதாகவும், அவள் தான் தன்னுடைய வாழ்க்கைத் துணையாகப் போகிறவர் என்றும் மீராவிடம் விளக்கினார் தர்ஷன். இது குறித்து மேலும் பேச மறுத்து விட்ட அவர், மீராவை தனது சக போட்டியாளராக கருதுவதாகவும், அதற்கு மேல் எதுவும் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.