Bigg Boss Tamil Day 21: பிக்பாஸ் நிகழ்ச்சி 20 நாட்களைக் கடந்து விட்டது. முதல் வாரம் எலிமினேஷன் நடக்காத நிலையில், கடந்த வாரம் முதல் ஆளாய் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் பாத்திமா பாபு. தற்போது இரண்டாவது ஆளாக வனிதா விஜயக்குமார் வெளியேறியிருக்கிறார்.
சனிக்கிழமை நிகழ்ச்சியில் மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் நேற்றைய நிகழ்ச்சி துவங்கியது. திரையில் தோன்றிய கமல், மீரா மிதுன் மற்றும் தர்ஷன் இருவருக்குமிடையே நடந்த சண்டையைப் பற்றி கேட்டார். தர்ஷனிடம் தனது காதலை சொன்னதாகவும், ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாகவும் மீரா கூறினார்.
இந்த விவாதத்தின் போது இருவரையும் சமாதானம் செய்து வைத்தார் கமல். இருப்பினும் இருவருக்குள்ளும் அந்த விவாதம் முடிவு பெறவில்லை. பின்னர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இது போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரேஷ்மா கதறி அழுதார். அவரைத் தொடர்ந்து மோகன் வைத்யா அழ, கடைசியில் வனிதாவை எதிர்த்துப் பேசிய சாக்ஷியும் வருந்தினார்.
பிக்பாஸ் வீட்டிலேயே வனிதா தான் தைரியாக பேசி வந்தார். அவரை வெளியேற்றுவதற்கான காரணம் என்ன? அப்படியென்றால் உண்மையாக இருக்கக் கூடாதா? நடித்துக் கொண்டே இந்த வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தான் மரியாதையா? என்றார் சாக்ஷி.
வெளியே வந்த வனிதா கமலை சந்தித்தார். போட்டியாளர்களுக்கு என்ன சொல்ல விட்ரும்புகிறீர்கள் எனக் கேட்டதற்கு, அனைவரும் வெற்றியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்றார் வனிதா.
பார்வையாளர்களுடன் அமர்ந்து, தன்னைப் பற்றி பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறும் கருத்துக்களை கேட்கலாம் என்கிற வாய்ப்பு வனிதாவுக்கு வழங்கப்பட்டது. அவர் இருப்பதை அறியாத போட்டியாளர்கள் வனிதா குறித்து சச்சரவாகவும், சந்தோஷமாகவும் பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.
சேரன், லாஸ்லியா, கவின், அபிராமி, தர்ஷன் ஆகியோர் வனிதாவின் குறைகளை குறிப்பிட்டனர். அவர்களைத் தொடர்ந்து பேசிய சாக்ஷி, ரேஷ்மா, ஷெரின் போன்றோர் அவர் மீதான் நிறைகளை தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக ”வனிதா தன்னுடைய மகள்களுக்காக யாருடைய ஆதரவுமின்றி தனியே போராடும் பெண்” என ரேஷ்மா சொன்னபோது, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த வனிதா கண்கலங்கினார்.
பின்னர் வனிதாவை மேடைக்கு அழைத்து, குறைகளை திருத்திக் கொள்ளும்படி கமல் கூறினார். அதோடு தனியாக வாழும் பெண்கள் தன்னம்பிக்கையுடனும், நேர்மையுடனும் வாழ வேண்டும் எனவும் தெரிவித்தார்.