Bigg-boss | hyderabad: சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனும் சர்ச்சை பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 17ம் தேதியுடன் நிறைவு பெற்ற பிக்பாஸ் தெலுங்கு 7 கிராண்ட் பைனலே-வில் பல்லவி பிரசாந்த் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டைட்டில் வின்னர் பட்டமும், 35 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
பல்லவி பிரசாந்த் தனது யூடியூப் சேனலில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து விவசாயம் குறித்த பலதரப்பு தகவல்களை பகிர்ந்து மக்களின் செல்வாக்கை பெற்றவர். இதன் மூலம் அவர் பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார். தனது அசத்தலான பேச்சு மூலம் தனக்கென ரசிகர்களை சம்பாதித்தார்.
கைது
இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பல்லவி பிரசாந்த் ஐதராபாத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அமர்தீப் சவுத்ரி முதலிடம் பெற்று வெற்றிபெறுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட பல்லவி பிரசாத் முதலிடம் பெற்றார். 2வது இடத்தை பிரபல சீரியல் நடிகரான அமர்தீப் பிடித்தார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின் அமர்தீப் சவுத்ரி கார் மூலம் வீட்டிற்கு அவரது தாயார் மற்றும் நடிகையும், மனைவியுமான தேஜஸ்வினியுடன் சென்றபோது, பல்லவி பிரசாத்தின் ரசிகர்களில் சிலர் அவரது காரை துரத்தி சென்று தாக்கியுள்ளனர். இதில், கார் கண்ணாடி உடைந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலுக்கு அமர்தீப் ரசிகர்களும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இப்புகாரில் பல்லவி பிரசாத் மற்றும் அவரது ரசிகர்கள் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று பல்லவி பிரசாத்தை கைது செய்துள்ளனர். முதன்மை குற்றவாளியாக பட்டியலிடப்பட்டுள்ள பிரசாந்த் (ஏ1), அவரது சகோதரர் மனோகர் (ஏ2) உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் கணக்குகள் மூலம் மற்ற நபர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“