விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், சுரேஷ் சக்ரவர்த்திக்கு மட்டும் இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது விவாதமாகியுள்ளது. அதனால், நெட்டிசன்கள் பலரும் சுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபமோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்துள்ள நிலையில், கடந்த வாரம் முன்னர் வரை 11 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். பிக் பாஸ் வீட்டில் மீதம் இருந்த 7 பேரும் கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர். அதில், சோம் சேகர் மட்டும் நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றார். பார்வையாளர்களிடம் இருந்து குறைவான வாக்குகளைப் பெற்ற ஷிவானி நாராயணன் மட்டும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அதனால், பிக் பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு சென்றுள்ளனர். இவர்களில் யார் பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் பார்வையாளர்கள் இடையே எகிறி வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, ரேகா, அறந்தாங்கி நிஷா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். அதேநேரத்தில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற சனம் ஷெட்டி, அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன் ஆகியோர் வரவில்லை. இவர்கள் இனிவரும் நாட்களில் பிக் பாஸ் வீட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இருந்து வெளியேற்றப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தியிடம் ட்விட்டரில் ஒருவர் நீங்கள் ஏன் பிக் பாஸ் வீட்டுக்கு வரவில்லை. நான் உங்களை பார்க்க விரும்புகிறேன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அவருக்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி, இதுவரை தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
சுரேஷ் சக்ரவர்த்தியின் பதிலைப் பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களும் நெட்டிசன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுரேஷ் சக்ரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபமோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"