Bigil Single Track Vs Nerkonda Paarvai Songs: கடந்த வாரம் முழுவதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான வாரம் என்றே சொல்லலாம். காரணம், நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்திலிருந்து ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியானது. பின்னர் அஜித்தின் ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தின் கடைசி பாடலான ‘அகலாதே’ பாடல் வெளியானது. அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்திலிருந்து ஹெச்.டி ஸ்டில்ஸ் வெளியானது. இதனால் விஜய், அஜித், ரஜினி என அனைத்து ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
இதில் பிகில் படத்தின் ’சிங்கப்பெண்ணே’ சிங்கிள் ட்ராக், நேர்க்கொண்ட பார்வை படத்தின் 4 பாடல்கள் என எடுத்துக் கொண்டு, எது யூ ட்யூபில் டிரெண்டிங்கில் இருக்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் நேர்க்கொண்ட பார்வை படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘வானின் இருள்’ பாடலின் லிரிக் வீடியோ கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது. 1 மாதத்தைக் கடந்த நிலையில், தற்போது வரை, யூ ட்யூபில் 2.3 மில்லியன் பார்வையாளர்கள் இப்பாடலை பார்த்திருக்கிறார்கள்.
அடுத்ததாக இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான ‘காலம்’ எனத்தொடங்கும் பாடல் ஜூலை 9-ம் தேதி ரிலீஸானது. இப்போது வரை இப்பாடலை 1.2 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.
பின்னர் நேர்க்கொண்ட பார்வை படத்தின் தீம் பாடலான, ’தீ முகம் தான்’ பாடல் ஜூலை 20-ம் தேதி வெளியானது. ஒரு வாரம் கடந்த நிலையில், இப்போது வரை இப்பாடலை 1.9 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.
கடைசியாக 25-ம் தேதி ‘அகலாதே’ பாடல் வெளியானது. கணவன் – மனைவிக்கு இடையேயான அன்பை விளக்கும் இப்பாடலை இதுவரை 6.6 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.
இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் ஏற்கனவே இணையத்தில் லீக்காகி இருந்தது. பெரும்பாலான விஜய் ரசிகர்கள் அப்போதே இப்பாடலை கேட்டிருந்தனர்.

இருப்பினும் கடந்த ஜூலை 23-ம் தேதி ‘சிங்கப்பெண்ணே’ பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதுவரை 6.9 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கும் இப்பாடல், வெளியான முதல் நாளில் இருந்து தொடர்ந்து யூ ட்யூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.