Bigil: பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறபிக்காத காரணத்தால் நாளை பிகில் வெளியாதில் எந்த சிக்கலும் இல்லை.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் தாக்கல் செய்துள்ள மனுவில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதோடு, தனது கதையையும் அட்லி கதையையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றார். தன் கதையை பயன்படுத்தியதற்காக 10 லட்ச ரூபாய் வழங்க இயக்குனர் அட்லீ, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமெனவும் அந்த கோரிக்கையில் குறிப்பிட்டார்.
அவர் மனுவில், ’பிரேசில்’ என்ற தலைப்பில் 2014 ஜூன் 12-ஆம் தேதி உருவாக்கிய தலைப்பில், கால்பந்தாட்டத்தை அடிப்படையாக கொண்டு 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருவதாகவும், சர்வதேச அளவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கதை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதை சர்வதேச அளவிலான நட்சத்திரங்களை கொண்டு படமாக்கினால் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளில் உள்ள தயாரிப்பாளர்களிடமும் கதை சொல்லியுள்ளதாகவும், குறிப்பாக மேற்கு அமெரிக்க எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரேசில் படத்தின் கதையாக, வறுமையில் வாழும் இளைஞர்களிடம் உள்ள கால்பந்தாட்ட திறமையை கண்டறியும் ராயப்பன் என்ற நடுத்தர வயது ரவுடி ஒருவர், இளம் வயது பயிற்சியாளருடன் சேர்ந்து அந்த இளைஞர்களை முன்னேற்றுவதும், அதற்கு இடையூறாக உள்ள கால்பந்தாட்ட பெடரேசன் மற்றும் அதன் கட்டமைப்பை எதிர்த்து போராடுவது, தடைகளை தாண்டி அந்த அணி சாதிப்பது என தனது கதைக்கு பதிப்புரிமை பெற்றுள்ளதாகவும், சான்றிதழுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அட்லி உருவாக்கியுள்ள பிகில் படத்தில் டிரைலர் முதல் ராயப்பன் கதாபாத்திரம் வரை தனது கதையை திருடி எடுக்கபட்ட படத்தை வெளியிட அனுமதித்தால் தனக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், வழக்கு மனுவில் சில குறைப்பாடுகள் இருப்பதாக கூறி, திருத்தங்கள் மேற்கொண்டு புதிய மனுவாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.