தனது ஒவ்வொரு படத்திலும் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனை அதிகரித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தான் முந்தைய படத்தில் செய்த வசூல் சாதனையை அடுத்தப் படத்தில் தானே முறியடிப்பது அவரது வழக்கம்.
திரையில் மட்டுமல்ல விஜய்யின் படங்களை ஒளிபரப்பும் சேனலும் நல்ல டி.ஆர்.பி-யைப் பெறும். அதனால் விஜய்யின் படங்கள் அதிக வியாபாரமாவதும், அவர் படங்களில் நிறைய முதலீட்டாளர்கள் நிறைய பணம் போடுவதும் நமக்கு ஆச்சர்யம் அளிப்பதில்லை. அந்த வகையில், அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் ‘பிகில்’ படமும் வியாபார சாதனை புரிந்துள்ளது.
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப் படம் பிஸினஸில் புதிய சாதனைப் படைக்கும் என்று தெரிகிறது. வெளியீட்டிற்கு முன்பாகவே 220 கோடியை ’பிகில்’ திரைப்படம் தாண்டும் என்பது தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. கோலிவுட்டில் படம் வெளியாவதற்கு முன், இந்த மாதிரியான பிஸினஸை ரஜினியின் படங்கள் மட்டுமே செய்துள்ளது.
பிகில் படத்தில் வெளிநாட்டு உரிமையை எக்ஸ்ஜென் ஸ்டூடியோ மற்றும் யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் ரூ. 30 கோடிக்கு பெற்றுள்ளது. இதன் ஆடியோ உரிமத்தை சோனி மியூஸிக் ரூ. 3.5 கோடிக்குப் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள சேட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி ரூ. 30 கோடிக்கு வாங்கியுள்ளது.
பிகில் படத்தின் தமிழக தியேட்டர் உரிமம் ரூ. 80 கோடி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய தியேட்டர் உரிமம் ரூ. 25 கோடிக்கும் மேல். டிஜிட்டல் ரைட்ஸ் 25 கோடி, இந்தி டப்பிங் மற்றும் சேட்டிலைட் உரிமம் ரூ. 27 கோடி என மொத்தம் 220 கோடிக்கு இதுவரை ’பிகிலின்’ பிஸினஸ் முடிந்துள்ளது.
இதற்கு முன் விஜய் நடித்த படங்கள் எதுவும் வெளியீட்டுக்கு முன் ரூ. 200 கோடியைத் தாண்டியதில்லை. இதன் மூலம் விஜய்யின் பாப்புலாரிட்டியும், மார்க்கெட்டும் அதிகரித்திருப்பது தெளிவாகிறது.