தமிழிசை சவுந்தரராஜனை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பேட்டி ஒன்றில் பிக் பாஸ் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
Advertisment
கடந்த வாரம் மது போதையில் காரை ஓட்டியதாக காயத்ரி ரகுராமிடம் போலிசார் அபராதம் வசூலித்திருந்தனர். இதுகுறித்து, “பாஜக தலைவர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை, அவர் குறித்து நான் ஏன் பதில் கூற வேண்டும்?” என பேசியிருந்தார்.
இதற்கு அப்போதே பதிலடி கொடுத்த காயத்ரி , “நான் பாஜகவில் இல்லை என கூற தமிழிசை யார்? நான் மோடியின் அரசியலை மதித்து பாஜகவில் இணைந்தேன். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டியது மட்டுமே தமிழிசையின் கடமை” என காட்டமாக பேசியிருந்தார்.
தமிழிசை சவுந்தரராஜன் - பிக் பாஸ் காயத்ரி ரகுராம் மோதல்
இவ்வாறு இந்த விவகாரம் சூடு பிடிக்க, ட்விட்டரில் தொடர்ந்து தமிழிசைக்கு எதிரான கருத்துக்களையே காயத்ரி பதிவு செய்து வந்தார். மேலும், தம்மை கட்சியை விட்டு தூக்குவதற்கு தமிழிசைக்கு அதிகாரமே இல்லையென்றும், தமிழக பாஜக வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் தமிழிசை தான் என்றும் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தமிழக பாஜக எந்த வகையிலும் வளர்ச்சி அடையவில்லை. அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் நோட்டாவிற்கு கீழ் வாக்குகளை வாங்கும் நிலைக்குச் சென்றதற்கே தமிழிசை தான் காரணம். அவரைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினால் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடையும் என தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.