கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்படிப்பில் நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதன் மூலம் பாபி சிம்ஹா இந்தியன் 2 படத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.
நடிகர் பாபி சிம்ஹா இந்த ஆண்டு வெளியான நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் கமல்ஹாசன் படத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து, இந்தப் படத்தின் 2வது பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர், லஞ்சத்திற்கு எதிரான படமான இந்தியன் படத்தின் 2வது பாகத்தை உருவாக்க அறிவிப்பு வெளியானது.
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பாகம் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள் அஜ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு தளத்தில்தான் பாபி சிம்ஹாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
பாபி சிம்ஹா இந்தியன் 2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அவர் கமல்ஹாசன் சித்தார்த் உடன் இணைந்து சில காட்சிகளில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியன் 2 இந்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத், விவேக், சமுத்திரகனி, பிரியா பவானி சங்கர், வித்யுத் ஜம்வால் மற்றும் அனில் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தியன் 2 படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். அனிருத் ரவிச்சந்தர் பின்னணி இசையமைக்கிறார்.
தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை வில்லன் பாத்திரத்தில் நடிக்க அணுகினர். ஆனால், இதற்கு அவரது இந்திப் படங்களின் கால்ஷீட் ஒத்துவராததால் அஜய் தேவ்கனை இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.