/indian-express-tamil/media/media_files/2025/08/12/bobby-simha-2025-08-12-17-38-56.jpg)
புகைப்படம்: ட்விட்டர்
நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவியும், நடிகையுமான ரேஷ்மி மேனன், 'ப்ரவோக் டிவி' யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு நேர்காணலில், தங்கள் காதல், திருமணம் மற்றும் திரைப் பயணம் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2002-ம் ஆண்டு, இயக்குநர் வசந்த பாலன் இயக்கிய 'ஆல்பம்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரேஷ்மி அறிமுகமானார். தொடர்ந்து 'ஜெயம்' படத்தில் இளம் வயது சுஜாதா கதாபாத்திரத்திலும், 'செல்லமே' படத்தில் இளம் வயது மைதிலி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். பிறகு, ஆறு வருட இடைவெளிக்குப் பின், 2010-ம் ஆண்டு வெளியான 'இனிது இனிது' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் திரையுலகில் மீண்டும் நுழைந்தார்.
ஜெயசிம்ஹா என்ற இயற்பெயரைக் கொண்ட பாபி சிம்ஹா, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2012-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'பீட்சா' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'சூது கவ்வும்' மற்றும் 'நேரம்' போன்ற படங்களில் நகைச்சுவை கலந்த வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2014-ல் வெளியான 'ஜிகர்தண்டா' திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதில் "அசால்ட் சேது" என்ற மதுரை ரவுடி கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார். அவர் ஆரம்ப காலத்தில் நடிகராக வேண்டும் என்ற தனது கனவுக்காகப் பலரின் கேலிக்கு ஆளான போதிலும், விடாமுயற்சியுடன் போராடி இன்று சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன், ஒரு படத்தில் இணைந்து பணியாற்றிய போது ஒருவரையொருவர் காதலித்து, ஏப்ரல் 22, 2016 அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் பற்றிப் பேசிய ரேஷ்மி, பாபியை "கட் அண்ட் ரைட்" நபர் என்று வர்ணித்தார். அவர் வெளிப்படையாக ரொமான்ஸ் செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்றும், காதல் கடிதங்கள் அல்லது பரிசுகள் கொடுப்பதில் ஆர்வம் இல்லாதவர் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், அவரது செயல்கள்தான் முக்கியம் என்றும், இந்த இயல்புக்கு தான் பழகிவிட்டதாகவும் கூறினார். பாபி தனது குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், கிடைக்கும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதாகவும் ரேஷ்மி குறிப்பிட்டார். மேலும், பாபி சிம்ஹாவின் மகன் தனது தந்தையைப் போல நடிகராக ஆர்வம் காட்டலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.