Rishi Kapoor: பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், புற்றுநோயுடனான தனது நீண்ட போரைத் தொடர்ந்து, மும்பையில் இன்று (வியாழக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 67.
ரிஷியின் மறைவு செய்தியை indianexpress.com க்கு ரந்தீர் கபூர் உறுதிப்படுத்தினார். "அவர் இப்போது தான் காலமானார்" என்று ரந்தீர் கூறினார். இந்த செய்தியை நடிகர் அமிதாப் பச்சனும் ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருந்தார். ”அவர் போய்விட்டார் ..! ரிஷி கபூர் .. போய்விட்டார்.. இப்போது தான் காலமானார்.. நான் அழிந்துவிட்டேன்! ” என்று தெரிவித்திருக்கிறார்.
ரிஷி கபூர் ஏப்ரல் 29 அன்று உடல் நலக்குறைவால், சர் ஹெச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரிஷி கபூருக்கு 2018-ஆம் ஆண்டில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக நியூயார்க் சென்றிருந்தார். அவர் தனது மனைவி நடிகை, நீது கபூருடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் அங்கேயே தங்கி 2019 செப்டம்பரில் மும்பைக்கு திரும்பினார்.
புகழ்பெற்ற நடிகர் ராஜ் கபூர் மற்றும் கிருஷ்ணா கபூரின் மகன் தான் ரிஷி கபூர். ’ஸ்ரீ 420’ என்ற படத்தில் தனது 3 வயதில் நடிப்பை தொடங்கினார். ராஜ் கபூர் இயக்கிய, ’மேரா நாம் ஜோக்கர்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
ரிஷி கபூர் 1970-களில் இருந்து 1990 வரை பிரபலமான நடிகராக இருந்தார். ’அமர் அக்பர் அந்தோணி’, ’கூலி’, ’கார்ஸ்’ மற்றும் ’சாந்தினி’ போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்திருந்தார். பிற்காலத்தில், ’ஹம் டம்’, ’அக்னிபாத்’ மற்றும் ’கபூர் & சன்ஸ்’ போன்ற திரைப்படங்களில் அவரது முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். அவர் கடைசியாக ’தி பாடி’ படத்தில், இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தார்.
ரிஷி கபூருக்கு அவரது மனைவி நீது கபூர், மற்றும் பிள்ளைகள் ரன்பீர் கபூர் மற்றும் ரித்திமா கபூர் ஆகியோர் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”