பாலிவுட் சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் முன்னாள் முதல்வர் பேரனை காதலித்து வருவதாகவும், விரைவில், இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி தமிழக்தின் தென்பகுதியை பூர்வீகமாக கொண்டவர். இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் ஜான்வி கபூர் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டேரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியில் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வரும் ஜான்வி கபூர், தெலுங்கில் ராம்சரனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக ஜான்வி கபூர் காதல் விவகாரம் குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியா என்பவரை ஜான்வி கபூர் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான மைதான் படத்தின் ப்ரமோஷன் விழாவில் பங்கேற்ற ஜான்வி கபூர் ஷி என்ற எழுத்து பொறிக்கப்பட்ட செயினை அணிந்திருந்தார்.
இதன் மூலம் இவர்கள் காதல் உறுதியாகியுள்ளதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ராம்சரனுக்கு ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜான்கி கபூர் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சமீபத்தில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜான்வி, படியில் முட்டி போட்டு பிரார்த்தனை செய்த விடியோ இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/