அர்ஜுன் நடித்த 'சாது' (1994) மற்றும் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' (2001) ஆகிய படங்களில் நடித்த நடிகை ரவீனா டாண்டன், நடிகர் விஜய் ஆண்டனியின் 'லாயர்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் களமிறங்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ள ரவீனா, தமிழ் சினிமாவிற்கு திரும்புவது குறித்து தனது அனுபவத்தை ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில், "நான் உற்சாகமாகவும், பதற்றமாகவும் இருக்கிறேன். ஏனெனில், என் தமிழை நான் மீண்டும் ஒருமுறை மெருகூட்ட வேண்டும்" என்று கூறினார்.
தென்னிந்திய சினிமாவில் பணியாற்றுவது குறித்து அவர் பேசுகையில், "நான் 1992-லிருந்தே தென்னிந்திய துறையில் பணியாற்றி வருகிறேன். ஏனென்றால், அவர்களின் படங்கள் எப்போதும் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன. நீங்கள் 90-களின் எனது எந்த பேட்டியை எடுத்துப் பார்த்தாலும், நான் இதே விஷயத்தை சொல்லியிருப்பேன். அவர்களின் கதைகள், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக வேரூன்றியுள்ளன. மேலும் அவை மேற்கத்திய நாடுகளுக்கு சேவை செய்ய முயற்சிப்பதில்லை. அதனால் தான், அவர்களின் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுகின்றன. அவை அடித்தளத்தில் வேரூன்றியுள்ளன. இது பெரிய அளவிலான மக்களை சென்றடைய மிகவும் முக்கியம். அவர்கள், தங்கள் மக்கள் விரும்புவதை பூர்த்தி செய்வதால், அதிக வெற்றிகளை பெறுகிறார்கள். அதை அவர்களால் அடையாளம் காண முடியும்" என்று தெரிவித்தார். தமிழைத் தவிர, தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் ரவீனா நடித்துள்ளார். யாஷின் 'கே.ஜி.எஃப் 2' (2022) அவரது கடைசி தென்னிந்திய திரைப்படமாகும்.
தமிழில் அவர் நடிக்க இருக்கும் 'லாயர்' படத்தை ஜோஷுவா சேதுராமன் இயக்குகிறார். இவர் 'ஜென்டில்வுமன்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், அதில் லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
'லாயர்' படத்தின் படப்பிடிப்பு ஜூன் 2025 இல் தொடங்கியது. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் 'லாயர்' படத்தை வெளியிடுகின்றனர்.