சினிமா பின்புலம் இல்லாமல் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் சொத்து மதிப்பு குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2006-ம் ஆண்டு இந்தியில் வெளியான கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். தொடர்ந்து வாவ் லம்ஹா, .லைஃப் இன் எ மெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2008-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக கங்கனா முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார்.
அதன்பிறகு தமிழில் பல படங்களில் கமிட் ஆகி முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்கனாவுக்கு தமிழில் சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து மீண்டும் இந்தி சினிமாவுக்கு சென்ற கங்கனா, இ.கே நிரஞ்சன் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் இதன் பிறகு அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்பு அமையவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைவி என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் தமிழில் ரீ-என்டரி கொடுத்த கங்கனா சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் படங்கள் தயாரிப்பிலும் நடிப்பிலும் பிஸியாக இருந்து வரும் கங்கனா ரனாவத், தற்போது அரசியலிலும் குதித்துள்ள நிலையில், நடைபெற்று வரும் நாடாமன்ற தேர்தலில், பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் அவர் தனது சொத்து மதிப்பு குறித்து வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி கங்கனா ரனாவத்தின் மொத்த சொத்து மதிப்பு 91 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்து 28.7 கோடியும், அசையா சொத்து 62.9 கோடியும் உள்ளதாகவும் கூறியுள்ள கங்கனா தனக்கு 17.38 கோடி கடன் இருப்பதாகவும், 3.91 கோடியில் பி.எம்.டபிள்யூ கார் மற்றும் 2 பென்ஸ் கார் இருப்பதாகவும் கூறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“