டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் அமிதாப் பச்சன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் மாபெரும் பெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தயாராகி வரும் நடிகர் ரஜினிகாந்த் ஜெய்பீம் இயக்குனர். டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் மஞ்சுவாரியார், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளார்.
அதேபோல் பிரபல தெலுங்கு நடிகரும் பாகுபலி திரைப்படத்தின் வில்லனுமான ராணா டகுபதி, சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் வில்லனாக மிரட்டிய பகத் பாசில் ஆகியோரம் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் ஷாக்கி ஷெரப், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்த நிலையில், அதே ஃபார்முலா தற்போர் தலைவர் 170 படத்திலும் தொடர்கிறது.
இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் இந்தியில் 200 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவர் இதுவரை தமிழ் படங்களில் நடிக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து அவர் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனிடையே தற்போது தலைவர் 170 படத்தின் மூலம் அமிதாப் பச்சன் தமிழ் சினிமாவில் நடிகரான அறிமுகமாகிறார். அவர் ஏற்கனவே 1997-ம் ஆண்டு ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் அஜித் விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அதன்பிறகு அமிதாப் தமிழில் படங்கள் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“