Aalayam Sriram: ’ஆலயம் ஸ்ரீராம்’ என எல்லோராலும் அறியப்பட்ட தயாரிப்பாளர் ஸ்ரீராம், நேற்று காலை மாரடைப்பால் காலமாகியிருக்கிறார். அவரின் வயது 60-களில் இருந்தது.
'ஆலயம் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இவர், இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து ’திருடா திருடா’, ’பாம்பே’ போன்ற ’ப்ளாக்பஸ்டர்’ படங்களை தயாரித்துள்ளார். ஸ்ரீராமின் மரணம் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளதாக சுகாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார். ”அவர் எங்களுடன் பார்ட்னராக இருந்தவர். நாங்கள் இணைந்து ’பாம்பே’, ’சத்ரியன்’, ’தசரதன்’ உள்ளிட்ட 5 முக்கிய படங்களை தயாரித்துள்ளோம். அவர் மணியின் நெருங்கிய நண்பர். ஸ்ரீராம் மற்றும் அவரது மனைவி நளினி ஸ்ரீராம் ஆகியோரைத் தான் முதன்முதலில் மணியின் நண்பர்களாக நான் சந்தித்தேன். அவரது வீட்டில் 1988 நான் தங்கி இருக்கிறேன். அவர் மிகவும் பொறுமையானவர், நகைச்சுவை தன்மை கொண்டவர்” எனவும் சுஹாசினி நினைவுக் கூர்ந்தார்.
தயாரிப்பாளர் ஸ்ரீராம் சரத்குமார் நடிப்பில் ’தசரதன்’ படத்தையும் அஜித் நடிப்பில் ’ஆசை’ படத்தையும் தயாரித்துள்ளார். இறுதியாக 2002-ல் விக்ரம் நடித்த ’சாமுராய்’ படத்தை தயாரித்தார்.
”தமிழ் சினிமாவுக்காக பல முக்கிய ஐடியாக்களை வைத்திருந்தவர். ’பாம்பே’ படம் வெளியாகும்போது, அது வித்தியாசமாக இருந்தது. அவரின் மனைவி நளினி, ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் காஸ்ட்யூமராக பணியாற்றினார். அவரது குடும்பத்தைப் பற்றி எனக்கு சற்று நெருக்கமாகவே தெரியும். மிக சீக்கிரமாகவே விடை பெற்று விட்டார்” என்று இயக்குனர் ராஜீவ் மேனன் தனது அஞ்சலியில் தெரிவித்தார்.
”அவர் சினிமாவுக்கு கொண்டு வந்ததை மக்கள் நினைவு கூறுவார்கள். அவர் மணிசாருடன் இணைந்து நம்மால் மறக்க முடியாத பல படைப்புகளை அளித்துள்ளார்” என்றார் இயக்குனரும் தயாரிப்பாளருமான பரத்பாலா. அப்போலோ மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் ஸ்ரீராம், அவரது இறுதி சடங்கு மயிலாப்பூரில் இன்று நடக்கிறது.