நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் சினிமா தயாரிப்பாளருமான போனிகபூர், “ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது, நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதேவி கோலிவுட்டில் மட்டுமல்லாமல், பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டினார். சினிமா தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி பாலிவுட்டிலேயே செட்டில் ஆனார். ஸ்ரீதேவி - போனிகபூர் தம்பதியருக்கு ஜான்வி, குஷி என 2 மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி 2018-ம் ஆண்டு துபாயில் மரணம் அடைந்தார். நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அவருடைய ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் கதைக்கு பஞ்சமோ என்னவென்று தெரியவில்லை, சில ஆண்டுகளாக அவர்களைப் பற்றி அவர்களே படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக நிறைய பயோபிக், ஆளுமைகளின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவிலும் மகா நடிகை, தலைவி போன்ற படங்கள் வந்தன. தற்போது தனுஷ் நடிப்பில், இளையராஜா பயோபிக் உருவாகி வருகிறது.
அந்த வரிசையில், நடிகை ஸ்ரீதேவியின் பயோபிக் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அண்மையில், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் பேட்டி ஒன்றில் கூறுகையில், “ஸ்ரீதேவி என்னைவிட ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரால்தான் நான் ஆன்மிகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். ஸ்ரீதேவி வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்களை ஏற்கக்கூடியவர். அதோடு வழக்கத்துக்கு மாறான செயல்களையும் செய்வார். அவரது தாயார் இறந்தபோது அவரது தாயாரின் சிதைக்கு ஸ்ரீதேவிதான் தீமூட்டினார்” என்று தெரிவித்தார்.
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த போனிகபூர், “அவர் பெரும்பாலும் தனிப்பட்ட நபராக (private person) இருக்க விரும்புவார். அவர் வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்கமாட்டேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“