கஜினிகாந்த:
கஜினிகாந்த், மணியார் குடும்பம், கடல் குதிரைள், அரளி, எங்க காட்டுல மழை, கடிகார மனிதர்கள், உப்பு புளி காரம், நாடோடி கனவு, காட்டுப்பய சார் இந்த காளி, போயா... உள்பட பன்னிரெண்டு படங்கள் சென்ற வாரம் வெளியாகின. ஆகஸ்ட் 10 விஸ்வரூபம் 2 வருகிறது, ஆகஸ்ட் 17 கோலமாவு கோகிலா வருகிறது, அதனால் ஆகஸ்ட் 3 நம்முடைய படத்தை வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் எடுத்த கூட்டு முயற்சி இது. எப்படியாவது படம் வெளியானால் போதும் என்று நினைப்பவர்களுக்கு படம் ஓடுவதும், ஓடாததும் ஒரு பிரச்சனையேயில்லை.
இந்த பனிரெண்டு படங்களில் தேறியவை என்று ஒரேயொரு படத்தைக்கூட கூறுவது கடினம். ஆறுதல் பரிசு வேண்டுமானால் கஜினிகாந்துக்கு தரலாம். ஆர்யா நடித்த படம், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு என்பதால் படத்தின் சென்னை ஓபனிங் பரவாயில்லை. கவனிக்க... சென்னை ஓபனிங். தமிழகத்தின் பி அண்ட் சி பகுதிகளில் படம் சுமாரான ஓபனிங்கையே பெற்றுள்ளது.
மேலே உள்ள பன்னிரெண்டில் சென்னை பாக்ஸ் ஆபிஸின் முதல் பத்து இடங்களில் இரண்டேயிரண்டு படங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. மணியார் குடும்பம் மற்றும் கஜினிகாந்த்.
மணியார் குடும்பம் இயக்குநர் தம்பி ராமையா தனது மகன் உமாபதிக்காக தெரிந்தே செய்து கொண்ட தியாகம். குணச்சித்திர(?) நடிராக தனது பிரபலத்தை முதலீடாக்கி, மகனை நாயகனாக்கி மணியார் குடும்பத்தை எடுத்தார். சென்னை சிட்டியில் முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் 5.65 லட்சங்களை வசூலித்துள்ளது. ஆம், ஆறு லட்சங்கள்கூட இல்லை. மணியார் குடும்பத்தின் நிலையே இவ்வளவு வறுமை என்றால் போயா, உப்பு புளி காரம், எங்க காட்டுல மழை படங்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. ஒப்பாரி சத்தம் பலமாக கேட்கிறது அந்த ஏரியாக்களில். இவை சில ஆயிரங்கள் வசூலித்திருந்தாலே ஆச்சரியம்.
கஜினிகாந்த் சென்னை சிட்டியில் முதல் மூன்று தினங்களில் சுமார் 215 திரையிடல்களில் 1.03 கோடியை வசூலித்துள்ளது. ஆர்யாவின் ஹிட் லிஸ்டை பார்க்கையில் இது அபாரமான ஓபனிங்தான். ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை எடுத்த இயக்குநரின் படைப்பு என்பதால் தியேட்டருக்கு வந்த கூட்டம்தான் அதிகம். படம் ரசிகர்களை திருப்தி செய்யாததால் வார நாள்களில் தியேட்டர்கள் காற்றாடும் என்கிறார்கள்.
ஒருவாரம் முன்பு வெளியான மோகினி சுமார் 50 லட்சங்களுடன் சென்னை தியேட்டர்களிலிருந்து மறைந்துவிட்டது. இரண்டு வருடங்களாக எடுத்த படம் மூன்றே நாளில் ஆவியாவது தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை. 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ஜுங்கா கடந்த ஞாயிறுவரை முதல் பத்து தினங்களில் சென்னையில் 3 கோடிகளை வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டுக்கு இந்த வசூல் போதாது. விஜய் சேதுபதி உள்பட பலரது கையை படம் கடிக்கும் என்கிறார்கள். ஜுங்காவே கையை கடித்தால் மற்ற படங்ளின் வசூல் கழுத்தையே கடிக்கும்.
கடைக்குட்டி சிங்கம் சென்னையில் சுமார் ஐந்தே முக்கால் கோடிகள் வசூலித்து வெற்றியை பதிவு செய்துள்ளது மட்டுமே சமீபத்திய தமிழ்ப் படங்களில் ஆறுதல்தரும் ஒரே அம்சம்.