விஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் படங்களின் வசூல் நிலவரம்!

விஸ்வரூபம் 2 பலருக்கும் நஷ்டத்தை ஏறபடுத்தும் என்பது உறுதியாகியிருக்கிறது.

பாபு :

சென்றவாரம் விஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் படங்கள் வெளியாயின. ஆங்கிலப் படமான தி மெக் கும் அதிக திரையரங்களில் வெளியாகியுள்ளது.

இந்திய அளவில் தி மெக் அதிக திரையரங்குகளில் வெளியாகி வசூலிலும் முதலிடத்தில் உள்ளது. சென்னையை பொறுத்தவரை இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் நாற்பத்தியிரண்டு லட்சங்களை வசூலித்துள்ளது. மிஷன் இம்பாஸிபிள் – ஃபால்அவுட்டுக்கு அடுத்து திரையரங்குகளுக்கு லாபம் சம்பாதித்துத் தரப்போகிற ஆங்கிலப் படம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

வியாழக்கிழமை வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பியார் பிரேமா காதல் படம் கருணாநிதியின் மறைவு காரணமாக ஒருநாள் தள்ளி வெள்ளிக்கிழமை வெளியானது. யுவன் இசை மற்றும் தயாரிப்பு, பிக் பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடி என பியார் பிரேமா காதலுக்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் விஸ்வரூபம் 2 படத்துடன் தைரியமாக வெளியிட்டனர்.

சென்னையில் முதல் மூன்று தினங்களில் சுமார் 170 திரையிடல்களில் அறுபத்தியிரண்டு லட்சங்களை பியார் பிரேமா காதல் வசூலித்துள்ளது. பிரபலமில்லாத நடிகர்களுக்கு இது நல்ல ஓபனிங்.

விஸ்வரூபம் 2 படத்தை தடை செய்ய கடைசி நேரத்தில் பிரமிட் சாய்மீரா தொடுத்த வழக்கு, ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு இருந்த கடன்கள் மற்றும் கருணாநிதியின் மறைவு ஆகியவற்றால் கமல் படத்துக்கு எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. விமர்சகர்களின் எதிர்மறையான கருத்துகள், திரைக்கதையின் தொய்வு ஆகியவை விஸ்வரூபம் 2 படம் பெரிய வசூலை பெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. சென்னையை பொறுத்தவரை ஓபனிங் வசூலில் அந்த சந்தேகத்தை விஸ்வரூபம் 2 உடைத்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சுமார் 435 திரையிடல்களில் 2.40 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த வருடத்தைப் பொறுத்தவரை இதுவே அதிகபட்ச சென்னை ஓபனிங். தானா சேர்ந்த கூட்டத்தைவிட இது அதிகம். அதேநேரம் தமிழக அளவில் தானா சேர்ந்த கூட்டத்துக்கு அடுத்த இடத்தையே கமல் படம் பிடித்துள்ளது. பி, சி சென்டர்களில் விஸ்வரூபம் 2 படத்தின் ஓபனிங் வசூல் குறைவாக உள்ளதே இதற்கு காரணம். இதன் இந்திப் பதிப்பான விஸ்வரூப் 2 பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. இந்திப் பதிப்பை வெளியிட்ட ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் 25 முதல் 30 கோடிகள்வரை நஷ்டத்தை சந்திக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் 2 சுமாரான ஓபனிங்கையே பெற்றுள்ளது. யுஎஸ்ஸில் முதல்நாளில் 36 லட்சங்களையும், இரண்டாவது நாளில் 70 லட்சங்களையும் வசூலித்துள்ளது. மூன்றாவது நாளில் ஒரு கோடியை தொட்டிருந்தாலும் விஸ்வரூபம் 2 இன் யுஎஸ் ஓபனிங் வசூல் மெர்சல், விவேகம், காலா, கபாலி படங்களைவிட மிகக்குறைவு என்பது முக்கியமானது.

பியார் பிரேமா காதல் படத்துக்கு தமிழகம் முழுவதும் பரவலான வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது. போட்ட பணத்தை எடுப்பதுடன் லாபமும் படம் சம்பாதிக்கும் என்கிறார்கள். விஸ்வரூபம் 2 பலருக்கும் நஷ்டத்தை ஏறபடுத்தும் என்பது உறுதியாகியிருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close