பாபு:
சென்ற வாரம் டிக் டிக் டிக், டிராபிக் ராமசாமி உள்பட சில நேரடித் தமிழ்ப் படங்களும் ஓஸன்ஸ் 8, இன்கிரிடிபிள்ஸ் 2 ஆகிய ஆங்கிலப் படங்களும், மம்முட்டி நடித்த ஆபிரஹாமின்டெ சந்ததிகள் மலையாளப் படமும் முக்கியமாக வெளியாயின. அதற்கு முன் வெளியான கோலிசோடா 2, ரேஸ் 3 இந்திப் படம், காலா ஆகியவையும் போட்டியில் இருந்தன. இந்தப் படங்களின் சென்னை வசூல் சொல்லும் சேதி என்ன பார்ப்போம்.
சென்ற வாரம் வெளியான தமிழ்ப் படங்களில் டிக் டிக் டிக், டிராபிக் ராமசாமி இரண்டும் மட்டுமே கவனத்தை கவர்ந்துள்ளன. டிக் டிக் டிக் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படம் என்ற அடைமொழியுடன் வெளியாகி பார்வையாளர்களை ஈர்த்தது. சென்னையில் இந்தப் படத்துக்குதான் அதிக காட்சிகள். வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சுமார் 300 காட்சிகள் திரையிடப்பட்டது. இதன் மூலம் 1.83 கோடியை படம் வசூலித்துள்ளது. நிச்சயம் மிக நல்ல ஓபனிங். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட இதேயளவு வரவேற்பை படம் பெற்றுள்ளது.
டிராபிக் ராமசாமிக்கு விமர்சனங்கள் நல்லமுறையில் கிடைத்தாலும் இன்றைய பார்வையாளர்களான இளைஞர்களை ஈர்க்கிற அம்சங்கள் படத்தில் இல்லை. அறிவுரைச் சொல்லி அறுப்பாங்கடா என்ற மனநிலையில் டிராபிக் ராமசாமி திரையரங்கை ஒதுக்குகிறார்கள். விளைவு...? சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 11.70 லட்சங்களையே சென்னையில் வசூலித்துள்ளது. சுமார் எண்பது காட்சிகள் மட்டுமே மூன்று தினங்களில் திரையிடப்பட்டுள்ளது.
சென்ற வாரம் வெளியான மம்முட்டியின் ஆபிரஹாமின்டெ சந்ததிகள் மலையாளத்தில் வெற்றிப் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 7.30 லட்சங்களை வசூலித்துள்ளது.
இதைவிட ஆங்கிலப் படங்கள் மேல். ஓஸன்ஸ் 8 படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 16 லட்சங்களை வசூலித்துள்ளது. இன்னொரு ஆங்கிலப் படம், இன்கிரிடிபிள்ஸ் 2 முதல் மூன்று தினங்களில் சென்னையில் 56.40 லட்சங்களை வசூலித்துள்ளது. இந்தப் படம் எப்படியும் இரண்டு கோடியை சென்னையில் தாண்டும் சாத்தியமுள்ளது.
நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டியது காலா. ரஜினி படம் வெளியானால் முதல் ஐந்து வாரங்களுக்கு அந்தப் படம்தான் பாக்ஸ் ஆபிஸில் முதலில் உட்கார்ந்திருக்கும். காலா இரண்டாவது வாரத்தோடு சரி. மூன்றாவது வார இறுதியில் 132 காட்சிகளில் 33 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. வார நாள்களில் சுமார் 73 லட்சங்கள்.
முதல் நான்கு தினங்களில் கிட்டத்தட்ட ஏழு கோடிகள் வசூலித்த படம், அடுத்த 7 தினங்களில் நான்கு கோடிகளைக்கூட வசூலிக்கவில்லை. அதற்கடுத்த ஏழு நாள்களில் சுமார் ஒரு கோடி. முதல் 18 தினங்களில் காலாவின் சென்னை வசூல், 11 கோடிகள். மெர்சல் வசூலைவிட பல கோடிகள் குறைவு.
இவை தவிர ஆங்கிலப் படமான ஜுராஸிக் வேர்ல்ட் - ஃபாலன் கிங்டம் 2.22 கோடிகளுடனும், இந்திப் படம் ரேஸ் 3, 1.26 கோடியுடனும், கோலிசோடா 2, 93 லட்சங்களுடன் ஒருசில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த வருட ஹிட் படங்கள் பட்டியலில் டிக் டிக் டிக் இணையும் சாத்தியமுள்ளது மட்டுமே சென்றவாரம் வெளியான படங்களில் ஆறுதல்தரும் அம்சம்.