/indian-express-tamil/media/media_files/2025/04/27/WGniaSDg6hPa0IKrDmHt.jpg)
பார்த்தால் பரபரப்பு தொற்றி கொள்ளும் "புல்லட் டிரெயின் எக்ஸ்ப்ளோஷன்" படம் விமர்சனம்!
கார், பேருந்து, விமானங்களில் வெடிகுண்டு வைப்பது போன்ற காட்சிகளை பார்த்தால் பரபரப்பும் தொற்றி கொள்ளும். உலகின் அதிவேக ரயிலான ஜப்பானின் புல்லட் டிரெயினில் வில்லன் குண்டு வைத்து மிரட்டுவது போன்ற படங்கள் 80-களில் வெளியாகி சக்கை போடு போட்டன. உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்திய படம்தான் ”தி புல்லட் டிரெயின்”. ”ஸ்பீடு” போன்ற படங்களையும் மறக்க முடியாது. தற்போது அதே பாணியில் ”புல்லட் டிரெயின் எக்ஸ்ப்ளோஷன்” என்ற படம் வெளியாகி உள்ளது. இப்படமும் அதே போன்ற திரைக்கதைதான்.
டோக்கியோவை நோக்கிச் செல்லும் ஹயபுஸா 60 என்ற புல்லட் டிரெயின். 100 கி.மீ. கீழே அதன் வேகம் குறைந்தால் அதில் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்து ஊரே இரண்டாக மாறிவிடும். பயணிகளும் இறந்துபோவார்கள. இந்த அசம்பாவிதத்தை தடுக்க 100 கோடி பில்லியன் வரை பேரம் பேசப்படுகிறது. கொலை மிரட்டல் விடுக்கும் வில்லனிடம் இருந்து டிரெயின் காப்பாற்றப்பட்டதா? அந்த வெடிகுண்டு என்ன ஆனது? என்பதுதான் ”புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோஷன்” படத்தின் கதை.
நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள இப்படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் முடிவு இப்படித்தான் நடக்கும் என்பது தெரிந்ததுதான். ஆனால், அதில் இருக்கும் முடிச்சுகளை சாமர்த்தியமாக ஹீரோ எப்படி நகர்த்தி சென்றார் என்பது சவாலாக இருக்கும். படத்தின் முதல் காட்சியிலேயே விறுவிறுப்போடு கதை நகர்கிறது. கதாப்பாத்திரத்தின் அறிமுகம் இல்லாமல் படம் தொடங்குகிறது. புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோஷன் படம் நகரநகர கதாப்பாத்திரங்களின் பெயர்கள் அறிமுகமாகிறார்கள். ஒரு கதாப்பாத்திரங்களை பார்க்கும்போது இவன்தான் வில்லன், இந்த நபர் இறந்துவிடுவார் என்ற உள் உணர்வு சொல்லும். ரசிகர்களை சந்தேகத்தோடு உலாவ செய்து கதையில் மாற்றத்தை கொண்டுவரும் ட்விஸ்ட் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும்.
நான் கேட்கும் 100 பில்லியன் பணத்தை அரசு தர வேண்டாம். நாட்டு மக்களின் சொந்த பணத்திலிருந்து எனக்கு தர வேண்டும் என கெடு வைக்கிறான் வில்லன். அரசை கேள்வி எழுப்புவது போலவே அவனது அதிகார மிரட்டல்கள் உள்ளது. பிறகு அந்த ரயிலில் பயணிக்கும் எழுத்தாளர் ஒருவர் பணத்தை மக்களிடம் இருந்து திரட்ட சமூகவலைதளம் ஒன்றை உருவாக்குகிறார். பிறகு பணங்களை மக்கள் அனுப்பி வைக்கிறார்கள். அப்போது ஒரு அரசியல்வாதியை பார்த்து அந்த எழுத்தாளர், நான் சாதாரண மனிதன். நீங்கள் பதவியில் இருக்கும் அரசியல்வாதி, நீங்கள் செய்வதை நான் செய்துக்கொண்டிருக்கிறேன். உங்களை பழி வாங்க மக்கள்தான் கிடைத்தார்களா என டக்கு டக்கு என்று கேள்விகளால் அரசியல்வாதியை திணற வைக்கிறார். இந்த காட்சியை பார்க்கும்போது விஜயகாந்த் அரசியல்வாதிகளிடம் சண்டை போடும் காட்சிகள் நினைவுக்கு வந்து சென்றன. உலக அளவில் அரசியல்வாதிகளின் கோரமுகம் இப்படித்தான் இருக்கிறது என்பது இப்படத்தை பார்க்கும்போது உணர முடிகிறது.
100 கி.மீ. குறைந்தால் சிதறும் டிரெயின் என்ற பயத்தோடு பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். பாதுகாப்பு அதிகாரியாக வரும் கசாகி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்திற்கு பலமாகவும் பாலமாக இருப்பது வசனங்கள்தான். இந்த ரயிலை ஓட்டும் பெண் ஒருவர் பேசும் வசனம் நிஜத்தை கண்முன்னே நிறுத்தியது. ஸ்பீடிங் கியரில் உள்ள கையை எடுக்க முடியாமல் மரத்துப் போய்விட்டது. ஒவ்வொரு விரலாக அதை விடுவிக்க முடியுமா என கேட்கிறார். கண்ணீர் விட்டு அழுக முடியாத குறையாக கைகளை தேட தாெடங்குவதுபோல உணர்வை அளித்தன. நெத்திபொட்டில் அடித்தார்போல் கூர்மையான வசனங்களால் புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோஷன் திரைப்படம் கவனத்தை பெற்றுள்ளது.
குண்டு வைத்த தீவிரவாதி ஏன் குண்டு வைத்தேன் என்பதை விளக்கும் போது அந்த காட்சி மனதில் பதியும் அளவிற்கு அழுத்தமானதாக இல்லாமல் போனது ஏமாற்றம். தீவிரவாதி கூறும் காரணம் வலுவாக இருந்திருந்தால் இன்னும் ஸ்பீடு எடுத்திருக்கலாம். புல்லட் டிரெயின் படத்தையும் புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோஷன் என்ற கதையையும் இந்த படத்தில் இணைத்ததற்கான காரணம் சரியாக இருக்கிறது. ஸ்பீட், ஸ்பீட் 2, புல்லட் ட்ரெயின், பர்னிங் ட்ரெயின் போன்ற படங்கள் பிடித்தவர்களுக்கு இப்படமும் நிச்சயம் பிடிக்க வாய்ப்புள்ளது.
புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோஷன்
இயக்குனர் - ஷின்ஜி ஹிகுச்சி
நடிகர்கள் - சுயோஷி குசானாகி, கனட்டா ஹோசோடா, நோன்
மதிப்பீடு - 4/5
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.