சர்ச்சை ஆகிறது சினிமா தலைப்பு: எடப்பாடி பழனிசாமியை இழிவு படுத்துகிறாரா எஸ்.ஏ.சி.?

எஸ்.ஏ.சி. இது குறித்து விரைவில் வெளிப்படையாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

By: September 17, 2019, 12:55:02 PM

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்தும் விதமாக கேப்மாரி படத் தலைப்பு அமைக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பற்ற வைத்த நெருப்பு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் இயக்குனரான எஸ்.ஏ.சி. இது குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது அடுத்த படத்திற்கு, ‘கேப்மாரி என்கிற சி.எம்.’ என பெயரிட்டிருக்கிறார். இதன் படப் பிடிப்புகள் பெருமளவில் முடிந்துவிட்டன. நடிகர் ஜெய், அதுல்யா ரவி இதில் நடிக்கிறார்கள். ஜெய்க்கு இது 25-வது படம்.

இயக்குனர் எஸ்.ஏ.சி-க்கு இது 70-வது படம். தனது இயக்கத்தில் வெளியாகும் கடைசி படம் இது என்றும் ஏற்கனவே கூறியிருக்கிறார் எஸ்.ஏ.சி. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனரும், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி, ‘இந்த அரசு சினிமாத் துறையுடன் இணக்கமாக இருக்கிறது. எளிதில் அணுகக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்தச் சூழலில் கேப்மாரி என்கிற சி.எம் என தலைப்பிட்டு படம் எடுப்பது கண்டிக்கத்தக்கது’ என்றார்.

கேப்மாரி படம் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வந்த போதும் இதுவரை யாரும் அதை சர்ச்சை ஆக்கவில்லை. முதல்முறையாக ஆர்.கே.செல்வமணி இப்பை கருத்து கூறியிருப்பதால் நிஜமாகவே எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்தும் விதமாக காட்சி அமைப்புகள் இருக்கிறதோ? என்கிற சந்தேகம் ஆளும்கட்சித் தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.

எஸ்.ஏ.சி படம் என்றாலே அரசியல் நெடி இல்லாமல் இருக்காது. அண்மை நாட்களாக சினிமா டிக்கெட்டுகளை ‘ஆப்’ மூலமாக விற்பனை செய்வது பற்றி தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசி வருகிறார். அது நடைபெறும் பட்சத்தில் படங்களின் கலெக்‌ஷன் துல்லியமாக தெரிய வரும். இதனால் முன்னணி நடிகர்களின் சம்பளமும் அதற்கு ஏற்ப குறைத்து நிர்ணயம் செய்யப்படும் சூழல் உருவாகலாம். முன்னணி நடிகர்களுக்கு சம்பள நிர்ணயம் குறித்தும் கடம்பூர் ராஜூ பேசி வருகிறார். இந்தத் தருணத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி, இப்படி தலைப்பிட்டு படம் எடுப்பதை உள்நோக்கம் கொண்டதாக ஆளும்கட்சியினர் பார்க்கிறார்கள்.

அதேசமயம் எஸ்.ஏ.சி. தரப்பினரோ, ‘இது முழுக்க ஐ.டி. தொழிலாளர்களை மையமாகக் கொண்ட கதை. இளைஞர்களைக் கவரும் விதமாக காதல், ஆக்‌ஷன் தூக்கலாக இருக்கும். படம் முடிவதற்கு முன்பே அதற்கு உள்நோக்கம் கற்ப்பிக்கிறவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?’ என ஆதங்கப்படுகிறார்கள். எனினும் எஸ்.ஏ.சி. இது குறித்து விரைவில் வெளிப்படையாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Capemari tamil movie sa chandrasekhar rk selvamani edappadi k palaniswami

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X