பிரபலா கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா இந்திய அளவில் அறியப்பட்ட ஒரு கர்நாடகா இசைப் பாடகர். இவர் கர்நாடக இசையில் தெலுங்கு கீர்த்தனைகள் மற்றும் தமிழ் கீர்த்தனைகளை மட்டும் பாடும் மரபான கர்நாடக இசை பாடகராக மட்டுமில்லாமல் மகாகவின் பாரதி பாடல்களை கர்நாடக இசையில் பாடி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார்.
பொதுவாக கர்நாடக இசை என்பது பிராமணர் உள்ளிட்ட உயர் தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களால் சபாக்களில் பாடும் இசையாக இருந்தது. கர்நாடக இசையில் இருந்து தலித்துகள் மற்றும் உழைக்கும் வெகுஜன மக்கள் வெளியே நிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் கலை இலக்கிய விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில்தான், கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா வெறும் கீர்த்தனைகளைப் பாடுபவராக மட்டுமில்லாமல் பாரதியார் பாடல்கள், தமிழிசை பாடல்களை கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடினார். கர்நாடகா இசை சபாக்களில் உயர்தட்டு வகுப்பினருகான இசை என்ற வரையறையை உடைக்கும் விதமாக, கடற்கரையில் வெகுமக்கள் திரளும் இடங்களில் கர்நாடக இசைப் பாடல்களைப் பாடினார். அதுமட்டுமல்ல, சென்னை பெசண்ட் நகர் அருகே உள்ள ஊரூர் ஆல்காட் குப்பம் பகுதியில் தான் மட்டுமல்லாமல் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களை அழைத்து வந்து கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினார்.
டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைத் துறையில் இப்படி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பொதுவெளியில் பத்திரிகைகளில் பெரியார், அம்பேத்கர் ஆகியோரைப் பற்றி பேசுபவராகவும் அவர்களின் புத்தகங்களைப் படித்து தற்கால சமூக அரசியல் சூழலில் பொருதி பேசுபவராகவும் இருந்தார். உண்மையில், கெட்டித் தட்டிப்போன கர்நாடக இசை துறையில் டி.எம்.கிருஷ்ணா செய்தது கிட்டத்தட்ட ஒரு பெரிய புரட்சி என்றே கூறலாம். கர்நாடகா இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைதுறையில் செய்த மாற்றங்களை பலர் விமர்சித்தாலும் அதை பற்றிக் கவலைப்படாமல் தனது முற்போக்கான தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில்தான், டி.எம்.கிருஷ்ணா கர்நாடகா இசையில் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை நிகழ்த்தியுள்ளார். இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி, தலித்துளின் புரட்சிப் பதாகை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளில் அம்பேத்கர் புகழைப் பரப்பும் வகையில் காவடி சிந்து வடிவில் அம்பேத்கர் காவடி சிந்து பாடியிருக்கிறார். டி.எம்.கிருஷ்ணா பாடிய அம்பேத்கர் காவடி சிந்து வரிகளை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார்.
கற்பி ஒன்று சேர் புரட்சிசெய் என்றே கருத்தை நெஞ்சில் விதைத்த வீரர் - போர்க் களத்தில் நின்று விளைந்த சூரர் என்ற காவடிச் சிந்து வடிவில் டி.எம்.கிருஷ்ணா பாடியுள்ள இந்த பாடல் அம்பேத்கரின் புகழ் பரப்பும் பாடல்களில் ஒரு மகுடமாக சேர்ந்துள்ளது.
பாபாசாகேப் அம்பேத்கரின் புகழைப் பரப்பு எத்தனையோ கானா பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், மக்கள் இசைப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ஆனால், ஒரு கர்நாடக இசைக் கலைஞரால் அம்பேத்கர் பாடல் பாடப்படவில்லை. இந்த சூழலில்தான், கர்நாடக இசை துறையில் சமூகவியல் நோக்கில் முற்போக்கான பெரிய மாற்றங்களைச் செய்த டி.எம்.கிருஷ்ணா அம்பேத்கர் ஜெயந்தி அன்று கர்நாடக இசையில் அம்பேத்கர் காவடி சிந்து பாடி ரசிகர்களைக் கவந்துள்ளார். டி.எம்.கிருஷ்னா பாடிய அம்பேத்கர் காவடி சிந்து வீடியோ சமூக ஊடகங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.