பட்டியலின சமூக்கத்தைச் சேர்ந்தவர்களை இழிவாக பேசியதாக நடிகை மீரா மிது மீது விசிக, புரட்சி பாரதம் கட்சியினர் மற்ரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலை கழகம் அமைப்பினர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மீரா மிதுன் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன் 2016ம் ஆண்டு மிஸ் தென் இந்தியா அழகிப் போட்டியில் வெற்றி பெற்று பிரபலமானார். இதையடுத்து, 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, 2019ம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது, சேரன் தன்னை தவறாக கையாண்டதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், வீடியோவில் அப்படி இல்லை என்று தெரியவந்தது. அதன் பிறகு, நடிகை மீரா மிதுனுக்கு பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காத சூழலில், அவ்வப்போது சமூக ஊடகங்களில் திரைத் துறையினரைப் பற்றி சர்ச்சைக் கருத்துகளைக் கூறி சலசலப்பை ஏற்படுத்தி வந்தார்.
அண்மையில், நடிகை நயன்தாரா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட நடிகைகள் முகத் தோற்றத்தில் தன்னைப் பார்த்து காப்பிடியடிப்பதாகக் கூறி குற்றம் சாட்டினார். இந்த நிலையில்தான், நடிகை மீரா மிது பட்டியல் இனத்தவரை சாதியைச் சொல்லிக் இழிவாக பேசிய வீடியோவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். அதில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சாதியினர்தான் முகத்தை காப்பி அடிக்கிறார்கள். அந்த சாதியைச் சேர்ந்த இயக்குனர்கள்தான் காப்பி அடிக்கிறார்கல். பட்டியல் இனத்தவர்தான் சினிமாவில் கிரிமினல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகிறார்கள் என்று சாதியைச் சொல்லி இழிவாக பேசியுள்ளார்.
மீரா மிதுன் பட்டியல் இனத்தவரை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசியதாக வெளியான வீடியோ பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மீரா மிதுன் கருத்துக்கு பலரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மீரா மிதுன் பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் நேற்று (07.08.2021) புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில், நடிகை மீராமிதுன் ட்விட்டரில் பட்டியல் இன மக்களை மிகவும் இழிவாக பேசி வீடியோ பதிவைப் பதிவிட்டுள்ளார் என புகார் தெரிவிக்கப்பட்டது. அதனுடன் மீரா மிது பேசியதாக கூறப்படும் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
அதே போல, புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புரட்சி பாரதம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், “பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை கொச்சையாகப் பேசி சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் மீரா மிதுன் மீது சாதி வன்கொடுமைப் பிரிவின் கீழும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்காக மிஜி பிரிவின் கீழும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
பட்டியல் இனத்தவரை இழிவாக பேசிய மீரா மிதுனை கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“