Chekka Chivantha Vaanam Review : செக்கச் சிவந்த வானம்... கிளாஸ் இயக்குனர் மணிரத்னத்தின் படைப்பு! கூடவே பெரும் நடிகர் பட்டாளம்! இந்த எதிர்பார்புடன் ரிலீஸ் ஆகிய செக்கச் சிவந்த வானம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் என்ன தாக்கத்தை உருவாக்குகிறது? இதில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் பங்களிப்பு என்ன? பார்க்கலாம்!
மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சிம்பு, அர்விந்த்சாமி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, அருண்விஜய் போன்ற நடிகர் பட்டாளத்தை வைத்து இயக்கியிருக்கிறார் மணி. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மணிரத்னம் படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. வருவதும் செல்வதுமாக இருந்தன.
Chekka Chivantha Vaanam Review : செக்க சிவந்த வானம் விமர்சனம் :
அதை உடைத்து மணிரத்னம் பேக் டூ பார்ம் என்கிற வகையில் அமைந்துள்ளது செக்கச் சிவந்த வானம். படத்தின் கதை என எடுத்துக் கொண்டால், ‘ஒரு விறகை தனியாக உடைத்துவிடலாம். ஆனால் கட்டி வைக்கப்பட்ட விறகை உடைக்கமுடியாது’ என்கிற ஒன் லைன் தான்! ஒற்றுமை அவசியம், அதுவும் சகோதர ஒற்றுமை அவசியம் என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்துள்ளது.
சிம்பு, அர்விந்த்சாமி உள்ளிட்ட மூன்று சகோதரர்கள் தங்களுடைய தந்தையின் இடத்தை அடைய விரும்புவதும் அது சந்தர்ப்பத்தால் வேறு ஒருவரால் முறியடிக்கப்பட்டு அந்த இடத்திற்கு அவர் வருவதும் தான் கதைச் சுருக்கம்.
அர்விந்த்சாமி வில்லத்தனம் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் ஏற்படுத்தி, ஆனால் அதைத்தாண்டி கதை செல்வது யூகிக்கமுடியாத திருப்பம். தட் ஈஸ் மணி ஸ்பெஷல்! படத்தின் கதாநாயகனாக யாரையும் குறிப்பிட முடியாத அளவு கன கச்சிதமாக அனைவருக்கும் சரியான விகிதத்தில் வாய்ப்பளித்தது தேர்ந்த திரைக்கதாசிரியர் மணி என்பதை நிரூபிக்கிறது.
தலைமுறைதாண்டியும் என்னால் களத்தில் போட்டியிடமுடியும் என்பதை மணி காட்டி இருக்கிறார். சிம்புவிடம் நடிப்பை வெளிவாங்கி அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குநர். விஜய் சேதுபதி கடைசிவரை கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு ஆன்டி ஹீரோவா என்று யூகிக்கமுடியா அளவு அசத்தியிருப்பதும் சிறப்பு!
பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஜெயசுதா, அருண்விஜய் என்று கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த விதமும் அவர்களுக்கான ரோல் அனைத்தும் கச்சிதமாக தைத்த உடை போல் பொருந்தியிருக்கிறது. இசை வழக்கம்போல் ரஹ்மான்! மணிரத்னம் படத்திற்கு மட்டுமே இசையமைப்பாளர் என்னும் அளவிற்கு வேலை செய்வார். பம்பாய், அலைபாயுதே, தில்சே போன்ற பெரிய வெற்றிப்பட அளவிற்கு இல்லை. ஆனாலும் மற்ற மணிரத்னம் படங்களைக் காட்டிலும் தேவலை என்கிற அளவில் இருக்கிறார்.
பின்ணனி இசை என்பது ராஜாவோடு போய்விட்டது என்பதுதான் உண்மை என்றாலும் ரஹ்மான் பெட்டர் என்கிற நிலை இருந்தது. இதில் அதுவும் மிஸ்ஸிங்! ப்ளீஸ் ரஹ்மான், நீங்க பார்ம்க்கு வரவேண்டியிருக்கிறது.
சந்தோஷ் சிவன் நேஷனல் செலிப்ரிட்டியானாலும் இயக்குநரின் பேவரிட் என்பதை பல இடங்களில் பறைசாற்றியுள்ளார். ஸ்ரீகர்பிரசாத் குறைவைக்கவில்லை என்பதை படத்தின் விறுவிறுப்பு காட்டுகின்றது. வைரமுத்து கிரீடம் இழந்துவிட்டது போல் தோற்றமளிக்கிறது. அவர் விளையாட்டு உச்ச நட்சத்திரத்திடம் மட்டுமே ஜொலிக்கின்றது.
ஆனால் அனைத்து குறையையும் மணிரத்னம் என்னும் கேப்டன் சுமந்து வெற்றியை ஈட்டியிருகின்றார். அதுவும் வயதாகிவிட்டது என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில் நான் எப்பவுமே ராஜா என்று பேக் டு பார்ம் ஆகி ஜெயித்திருக்கிறார்.
ரசிகர்கள் ஆதரவு 80%, சராசரி சினிமா ரசிகர்கள் ஆதரவு 70%, ஆர்டினரி சினிமா வியூவர்ஸ் 60% என ஆல்கிளாஸ் சக்சஸ் கொடுத்துள்ளார் மணிரத்னம். சபாஷ், மணி சார்!
திராவிட ஜீவா