கார் விபத்து வழக்கில் ஆஜராகாத நடிகை யாஷிகா ஆனந்த்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருந்து வருபவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமான யாஷிகா, தமிழ் சினிமாவில் நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
இதையும் படியுங்கள்: செம்ம தில்… பட விழாவில் பாட்டிலும் கையுமாக வந்த கீர்த்தி சுரேஷ்!
இந்தநிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு யாஷிகா தனது நண்பர்கள் வள்ளிச்செட்டி பாவனி, சையத், ஆமிர் ஆகியோருடன் புதுச்சேரிக்குச் சென்று விட்டு, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்னை திரும்பினார். அவர்கள் பயணித்த கார் மாமல்லபுரம் அருகே உள்ள சூலேரிக்காடு பகுதியில் வந்துக் கொண்டிருந்தப்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பாவனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவரது வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
காயத்திலிருந்து மீண்ட யாஷிகா தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில், மாமல்லபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மார்ச் 21 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நேற்று முன்தினம் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில், யாஷிகா ஆஜராகாததால், வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் ஏப்ரல் 25 ஆம் தேதி யாஷிகா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. யாஷிகா நேரில் ஆஜராகவில்லை என்றால் போலீசார் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil