பாபு:
சென்றவாரம் மூன்று முக்கிய படங்கள் வெளியாகின. விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கிய ஜுங்கா, மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா முதல்முறை இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் மோகினி, டாம் க்ரூஸ் நடிப்பில் மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் ஆறாவது படமான மிஷன் இம்பாஸிபிள் – ஃபால்அவுட் ஆங்கிலப் படம். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த மூன்று படங்களும் சென்றவாரம் வெளியாகின.
ஜுங்கா படம் பிளாக் க்யூமர் ஜானரில் எடுக்கப்பட்டிருந்தது. கஞ்சத்தனமான டானாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். படத்தின் முதல்பகுதியில் வரும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்துக்கு நல்ல வரவேற்பு. சென்னையில் முதல் மூன்று தினங்களில் சுமார் 270 திரையிடல்களில் ஜுங்கா 1.63 கோடியை ஓபனிங் வசூலாக பெற்றுள்ளது. கடைக்குட்டி சிங்கத்தின் சென்னை ஓபனிங் வசூலைவிட (1.48 கோடி) இது அதிகம். மிக நல்ல வசூல்.
மோகினி படத்தை மாதேஷ் இயக்கியிருந்தார். த்ரிஷாவின் முதல் நாயகி மையப்படமான நாயகி (படத்தின் பெயரும் அதே) தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ப்ளாப்பான நிலையில் மோகினி வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. அதேபோல் இயக்குநர் மாதேஷுக்கும். ஆனால், படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. முதல் மூன்று தினங்களில் மோகினி சென்னையில் சுமார் 140 திரையிடல்களில் 36 லட்சங்களை வசூலித்துள்ளது.
ஆங்கிலப் படமான மிஷன் இம்பாஸிபிள் – ஃபால்அவுட்டை கிறிஸ்டோபர் மெக்கேரி இயக்கியிருந்தார். டாம் க்ரூஸின் ஜாக் ரீச்சர், மிஷன் இம்பாஸிபிளின் முந்தையை பாகமான ரோக் நேஷன் ஆகியவற்றை இயக்கியவர். படம் மிகநல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. வசூலும் அமோகம். சென்னையில் இப்படம் முதல் மூன்று தினங்களில் சுமார் 190 திரையிடல்களில் ஒரு கோடியை வசூலித்துள்ளது. மிகச்சிறப்பான வசூல்.
இந்திய அளவில் மிஷன் இம்பாஸிபிள் – தி ரோக் நேஷன் முதல்வாரத்தில் 38.70 கோடிகளை வசூலித்திருந்தது. அதன் அடுத்த பாகமான ஃபால்அவுட் முதல் மூன்று தினங்களில் 37 கோடிகளை வசூலித்துள்ளது. அதேபோல் ரோக் நேஷனின் மொத்த இந்திய வசூல் 48 கோடிகள். ஃபால்அவுட் 100 கோடிகளை வசூலிக்கும் என கணித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஜுங்கா சிறப்பாகவும், மோகினி சுமாராகவும் ஓபனிங்கை பெற்றுள்ளது. வெளிநாடுகளிலும் அதேதான் நிலை. யுஎஸ்ஸில் ஜுங்கா 24.74 லட்சங்களையும், யுகே மற்றும் அயர்லாந்தில் 18.70 லட்சங்களையும், ஆஸ்ட்ரேலியாவில் 20 லட்சங்களையும், நியூசிலாந்தில் 2 லட்சங்களையும், மலேசியாவில் 40.40 லட்சங்களையும் ஓபனிங் வசூலாக பெற்றுள்ளது.
எனினும் வார நாள்களில் படத்துக்கு கிடைக்கும் வசூலைப் பொறுத்தே படத்தின் வெற்றியை தீர்மானிக்க இயலும்.